Published : 18 Aug 2015 08:24 AM
Last Updated : 18 Aug 2015 08:24 AM

இலங்கையின் அடுத்த பிரதமர் யார்?

இலங்கையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அப்போதைய அதிபர் ராஜ பக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன.

ராஜபக்ச அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனா எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

அதிபர் தேர்தலில் போட்டி யிட்டபோது விரைவில் நாடாளு மன்ற தேர்தலை நடத்துவேன் என்று சிறிசேனா வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கேற்ப அவர் பதவியேற்ற 7 மாதங்களில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

ஆளும் கூட்டணியில் குழப்பம்

இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டார். ஆனால் அதனை அதிபரும் கூட்டணியின் தலைவருமான சிறிசேனா ஏற்கவில்லை. அண்மையில் அவர் ராஜபக் சவுக்கு அனுப்பிய கடிதத்தில், கட்சியில் உங்களைவிட திறமை சாலிகள் பலர் உள்ளனர், அவர் களில் ஒருவருக்குதான் பிரதமர் வாய்ப்பு அளிக்கப்படும், உங்களை பிரதமராக்க மாட்டேன் என்று தெரிவித்தார். அந்த கடிதத்துக்கு ராஜபக்ச அனுப்பிய பதிலில், அதிபர் தேர்தலில் மக்களின் தீர்ப்பை மதித்து நான் பதவி விலகினேன், அதுபோல இப்போது பெரும்பான்மை மக்கள் என்னை ஆதரித்தால் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ரணிலா, ராஜபக்சவா?

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட ணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அதிபர் சிறிசேனா எதிர்த்தாலும் தேர்தல் களத்தில் ராஜபக்சவே கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக உள்ளார். எதிரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே களத்தில் உள்ளார்.

அவர்களில் ஒருவர்தான் பிரதமர் வேட்பாளராக பதவியேற்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் ராஜபக் சவுக்கு எதிராக அதிபரும் உலக நாடுகளும் ஓரணியில் திரண்டு நிற்பதால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

பிரதான இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை யெனில் இலங்கை அரசியலில் 3-வது இடத்தில் உள்ள ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ராணுவத்தின் தலையீடு இல்லை

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நேற்று அமைதியாக முடிந்தது. சில இடங்களில் மிகச் சிறிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

ரும்புக்கனா பகுதியில் தடையை மீறி துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல வவுனியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவை தவிர பெரிய அளவில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. கடந்த முறை ராணுவத்தின் தலையீடு அதிகமாக இருந்தது. ஆனால் இம் முறை பாதுகாப்புப் பணியில் மட்டுமே ஈடுபட்டதாக வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

முடிவுகள் வெளியாக தாமதமாகும்

இலங்கை தலைமைத் தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை வழக்கத்தைவிட அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனால் தபால் வாக்குகள் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரே வெளியிடப்படக்கூடும். இதேபோல தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று மதியத்துக்குள் தெரியவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு வரை தாமதமாகலாம் என்று தேர்தல் ஆணையர் இப்போது அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் மத்திய குழுவில் 25 பேர் நீக்கம்

இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் இருந்து 25 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அதிபரும் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேனா நேற்று பிறப்பித்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியின் பொதுச்செயலாளர் அநுர பிரயதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுஸில் பிரேமஜயந்த ஆகியோரை அதிபர் நீக்கினார். அவர்கள் இருவரும் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் ஆவர். இந்நிலையில் லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் இருந்து 25 உறுப்பினர்கள் நேற்று நீக்கப்பட்டுள்ளனர். இவர்களும் ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

செலவு ரூ.325 கோடி

தேர்தல் பணியில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் தேர்தல் பணிகளுக்காக மொத்தம் ரூ.325 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x