Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM
கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா கைகுலுக்கியது தற்செயலானது, திட்டமிட்ட நிகழ்வு அல்ல என்று வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தென்னாப்பிரிக்கா சென்றிருந்த ஒபாமா, அங்கு வந்திருந்த ரவுல் காஸ்ட்ரோவிடம் தாமாகவே சென்று கைகுலுக்கினார். அமெரிக்காவுக்கு வேண்டப்படாத நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ள கியூபா அதிபரிடம் ஒபாமா திடீரென நட்பு பாராட்டி கைலுக்கியது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக அமைந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப் பட்டுள்ளது.
அதில், மண்டேலா நினைவு நிகழ்ச்சியில் மேடையேறி பேசச் செல்லும் வழியில், ரவுல் காஸ்ட்ரோவுடன் ஒபாமா கைகுலுக்கினார். இது தற்செயலான நிகழ்வுதான். திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. ஒபாமா, ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிவிட்டார் என்பதற்காக கியூபா தொடர்பான அமெரிக்காவின் கொள்கை மாறிவிடும் என்பது அர்த்தமல்ல. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது எதிர்ப்படும் வெளி நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து பரிமாறிக் கொள்வதை ஒபாமா ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளார்.
எனவே, ஒரு சிறிய நிகழ்வை வெவ்வேறு விதமாக வர்ணிப்பது தேவையற்றது. பொதுவான விஷயங்களில் கியூபாவுடனான உறவு தொடர்பாக மரியாதைக்குரிய முடிவுகள் பலவற்றை சமீபகாலமாக அமெரிக்கா எடுத்துள்ளது.
கியூபாவுக்கு குடும்பமாக சுற்றுலா செல்வது, பணம் அனுப்புவது போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஒபாமா நீக்கியுள்ளார். அதேநேரத்தில் கியூபாவில் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது.
கியூபாவால் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர் ஆலன் கிராஸ் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கிறோம் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT