Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

அணுசக்தி திட்டத்தில் உடன்பாடு: ஈரானுக்கு அமெரிக்கா பாராட்டு

உலக வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணு சக்தி திட்டங்கள் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இடைக்கால உடன்பாடு ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய அணு சக்தி திட்டங்களில் அவசரம் காட்டாமல் இருப்பதற்கு பலனாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையிலிருந்து சுமார் 700 கோடி டாலர் மதிப்புக்கு நிவாரணம் வழங்க இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அணு ஆயுதங்களை தயாரிக்கும் வாய்ப்பு ஈரானுக்கு கிடைத்து விடக் கூடாது என்கிற நோக்கத்துடன் ஏற்பட்டுள்ள மிக முக்கிய தொடக்க நடவடிக்கை இது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வர்ணித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 4 நாளாக நடந்த பேச்சுவார்த்தையின் உச்சகட்டமாக ஞாயிற்றுக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர் என ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் கேத்தரீன் ஆஷ்டன் அறிவித்தார். யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கைகள் சிலவற்றை நிறுத்திக் கொள்ளவும் தமது அணு சக்தி திட்டங்களை ஆய்வாளர்கள் சோதனை நடத்த தாராளமாக அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது ஈரான்.

ஈரானின் சர்ச்சைக்குரிய அணு சக்தி திட்டப்பணிகள் தொடர்வதை தடுத்து நிறுத்த வகை செய்யும் விரிவான உடன்பாட்டுக்கு இடைக்கால உடன்பாடு வழி செய்யும்.

இருப்பினும் அணு மின் சக்தியை தயாரிக்க தனக்கு உரிமை இருப்பதாக ஈரான் உறுதிபடத் தெரிவித்திருக்கிறது.

ஈரான் மீது அடுத்த 6 மாதங்களுக்கு அணு சக்தி திட்டம் சார்ந்த புதிய தடைகள் ஏதும் இருக்காது என்பதுதான் உடன்பாட்டின் மூலமாக அதற்கு கிடைத்துள்ள பலன்.

5 சதவீதத்துக்கு மேல் யுரேனியம் செறிவூட்டல் செய்யப்படுவதை ஈரான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் உடன்பாட்டின் ஒரு அம்சம். 5 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டப்படும் யுரேனியம் அணு ஆயுதம் தொடர்பான ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்கிற காரணத்தால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. செறிவூட்டிய யுரேனியத்தின் இருப்பை ஈரான் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதும் நிபந்தனைகளில் அடங்iகும். 6 மாத தொடக்க நிலை உடன்பாடு என்ற பெயரில் இந்த இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு விதிக்கும் கட்டுப்பாடுகள், அணு ஆயுத தயாரிப்பில் இறங்க முடியாத வகையில் ஈரானை தடுத்து நிறுத்தும் என தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இந்த ஆறுமாத காலத்தில் தான் கொடுத்த உத்தரவாதத்தை ஈரான் மீறினால் அதற்கு அளித்த நிவாரணத்தை விலக்கிக் கொள்வோம். நெருக்குதலை அதிகரிப்போம் என்று எச்சரித்தார் ஒபாமா.

நாடுகளுக்கு பாதுகாப்பு

ஜெனிவாவில் சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இஸ்ரேல் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு இந்த பிராந்தியம் பாதுகாப்பு மிக்கதாக அமைய வகை செய்துள்ளது இந்த ஒப்பந்தம் என்று வர்ணித்தார். ஈரான் அணு சக்தி திட்டங்கள் பற்றி எழுந்த சந்தேகங்களுக்கு தீர்வு தரக்கூடிய உடன்பாட்டை அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் வழங்கியுள்ளன என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் ஒபாமா.

ஈரான் அதிபர் பாராட்டு:

ஈரானின் அணு சக்தி திட்டங்கள் தொடர்பாக உலக வல்லரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பது புதிய எல்லையை தொட வழிவகுக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஈரான் அதிபர் ஹசன் ரெளகானி.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது: இந்த பிரச்சினைக்கு ஜெனிவா நகரில் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளது. என்னை வெற்றிபெறச் செய்த ஈரான் மக்கள் விருப்பத்தின்படி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நிலைக்காது என்பதை இந்த உடன்பாடு நிரூபித்துவிட்டது என்றார் ரெளகானி. ஈரானின் யுரேனிய செறிவூட்டல் பணிகளுக்கு இந்த உடன்பாடு அங்கீகாரம் கொடுத்துவிட்டது என்றார் ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அப்பாஸ் அராக்சி.

-பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x