Published : 16 Sep 2013 12:51 AM
Last Updated : 16 Sep 2013 12:51 AM

இராக்கில் கார் குண்டு தாக்குதல்: 35 பேர் சாவு

இராக்கின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலிலிருந்து பாக்தாத் மாகாண கவுன்சில் தலைவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இராக்கில் கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன்மூலம் அங்கு மீண்டும் இனக்கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.

இராக்கின் 9 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை 12 கார் குண்டுகள் வெடித்தன. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஷியா இனத்தவர்கள் அதிக அளவில் வசிக்கும் பபில் மாகாணம் ஹிலா நகரில் மட்டும் அதிகபட்சமாக 4 கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் மட்டும் 16 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சன்னி இனத்தவர்கள் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பினருடன் இணைந்து ஷியா பிரிவினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x