Published : 19 Mar 2014 08:49 AM
Last Updated : 19 Mar 2014 08:49 AM

மலேசிய விமானம் வெடிக்கவில்லை, மோதவில்லை: ஐ.நா கண்காணிப்பு அமைப்பு திட்டவட்டம்

மாயமான மலேசிய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறவில்லை, தரையில் விழுந்து நொறுங்கவில்லை, கடலில் மூழ்க வில்லை என்று ஐ.நா. சபை சார்ந்த சி.டி.பி.டி.ஓ. அமைப்பு திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.

வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அணுகுண்டு சோதனை தடை உடன்பாடு அமைப்பு (சி.டி.பி.டி.ஓ.), அணுகுண்டு சோதனைகளைக் கண்டறிவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதி நவீன கண்காணிப்புக் கருவிகளை நிறுவியுள்ளது.

நிலத்திலோ, கடலிலோ, வான் பரப்பிலோ அதிர்வுகள் எழுந்தால் இந்தக் கருவிகளில் பதிவாகிவிடும். போயிங் 777 போன்ற பெரிய விமானங்கள் வான்பரப்பில் வெடித்துச் சிதறினாலோ, தரையில் விழுந்து நொறுங்கினோ, கடலில் விழுந்தாலோ அந்த அதிர்வலைகள் நிச்சயமாக சி.டி.பி.டி.ஓ. கருவிகளில் பதிவாகியிருக்க வேண்டும்.

ஆனால் அதுபோன்ற எந்த அதிர்வலைகளும் கண்காணிப்புக் கருவிகளில் பதிவாகவில்லை. எனவே மாயமான மலேசிய விமானத்துக்கு அசம்பாவிதம் நேர்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சி.டி.பி.டி.ஓ. செயல் இயக்குநர் லாசினோ ஜெர்போ நியூயார்க்கில் நிருபர்களிடம் பேசியபோது,

"இன்பராசவுன்ட், இன்பராசோனிக் சென்சார்கள் மூலம் பூமியை முழுவதுமாக கண்காணித்து வருகிறோம், எங்களது கண்காணிப்புக் கருவிகளில் எதுவும் பதிவாக வில்லை, எனவே ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களது செயற்கைக்கோள்கள், கண்காணிப்பு கருவிகள் மூலம் விமானத்தை தேடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

சீனாவின் 21 செயற்கைக் கோள்கள் கண்காணிப்பு

மாயமான மலேசிய விமானத்தில் மொத்தம் 239 பேர் இருந்தனர். இதில் 153 பேர் சீனர்கள். எனவே விமானத்தை தேடும் பணியில் சீனா அதிக அக்கறை காட்டி வருகிறது. தற்போது 21 செயற்கைக் கோள்கள் உதவியுடன் சீன விண்வெளித் துறை விஞ்ஞானி கள் விமானத்தைத் தேடி வரு கின்றனர். சந்தேகத்துக்குரிய சீன எல்லைக்குள்பட்ட நிலப்பரப்புகள், கடல் பகுதிகளிலும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

விமானத்தில் பயணம் செய்த 153 பயணிகள் குறித்தும் சீன போலீஸார் விசாரணை நடத்தி யுள்ளனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோலாலம்பூரில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி யளித்த மலேசியாவுக்கான சீன தூதர் ஹூனாங் ஹூகாங், சீனப் பயணிகள் விமானத்தைக் கடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.

மலைப் பகுதிகளில் விமானம் பறந்ததா?

மலேசிய ராணுவ ரேடார்களில் இருந்து தப்பிக்க மலைப் பிரதேசங்களில் விமானம் பறந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அந்தநாட்டு விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலேசிய விமானி ஒருவர் கூறியபோது, மலேசியாவின் வடபகுதி மலைப் பிரதேசங்கள் வழியாக விமானம் பறந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. அந்தப் பகுதியில் குணங் டகான் (2286 மீட்டர்), குணங் பின்டாங் (1828 மீட்டர்) ஆகிய சிகரங்கள் மட்டுமே உயமானவை. அந்த இரு சிகரங்களை பற்றி நன்கறிந்த விமானியால் 9000 அடி உயரத்தில் அந்த மலைப்பிரதேசத்தில் இரவிலும் விமானத்தை செலுத்த முடியும் என்று தெரிவித்தார்.

விமானியின் அரசியல் தொடர்பு

மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு வழக்கு ஒன்றில் அண்மையில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மாயமான விமானத்தின் விமானி ஜகாரி அகமது ஷா மக்கள் நீதிக் கட்சியின் தீவிர உறுப்பினர் ஆவார். கட்சித் தலைவருக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் விமானத்தை அவர் கடத்தினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை ஜகாரி அகமது ஷாவை தெரியாது என்று மறுத்துவந்த அன்வர் இப்ராகிம், முதல்முறையாக அவர் தனது உறவினர் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து கோலாலம்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், விமானி ஜகாரி அகமது ஷா எனது மருமகன்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர். என்னை அவர் பலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதற்காக அவரை குற்றவாளியாக பார்க்க வேண்டாம். விசாரணைக்குப் பிறகு எந்த முடிவுக்கும் வரலாம் என்று கேட்டுக் கொண்டார்.

தேடுதல் பணியில் 30 லட்சம் பொதுமக்கள்

மாயமான விமானத்தை தற்போது 26 நாடுகள் தேடி வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல்குளோப் என்ற தனியார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் உதவியுடன் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் வரை படங்களின் மூலம் விமானத்தை தேடி வருகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்கள் மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

கடந்த மார்ச் 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம் பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.20 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்தது. எந்த தடயமும் கிடைக்காத நிலையில் மலேசிய விமானத்தின் மர்ம முடிச்சை செயற்கைக்கோள்களால் மட்டுமே அவிழ்க்க முடியும் என்று நிபுணர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மாலத்தீவில் விமானம் பறந்ததா?

மாலத்தீவு பகுதியில் மர்ம விமானம் பறந்ததாக அந்தப் பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 8-ம் தேதி காலை 6.15 மணி அளவில் ஜம்போ ஜெட் விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்ததை மாலத்தீவின் குடா ஹவுத்து பகுதியைச் சேர்ந்த மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:

எங்கள் தீவில் மிகப் பெரிய விமானம் இவ்வளவு தாழ்வாக பறந்ததை நாங்கள் பார்த்தது இல்லை, விமானத்தின் கதவுகள்கூட தெளிவாகத் தெரிந்தன. அதன் சத்தம் காதை கிழிப்பதாக இருந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்கூட விமானத்தின் சத்தத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த மர்ம விமானம் அநேகமாக மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேதி, நேரம் ஆகியவை பொருத்தமாக இருப்பதால் இதுகுறித்தும் மலேசிய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. கிராம மக்களை மேற்கோள் காட்டி மாலத்தீவு நாளிதழான ஹவீரு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x