Published : 16 Oct 2013 12:03 PM
Last Updated : 16 Oct 2013 12:03 PM

புகுஷிமா அணு உலையை அச்சுறுத்தும் விப்ஹா புயல்

ஜப்பானின் புகுஷிமா அணுஉலை பகுதியை நோக்கி 'விப்ஹா' என்று பெயரிடப்பட்ட புயல் நகர்ந்து வருகிறது.

அணுஉலையில் கதிர்வீச்சுக்கு உள்ளான தண்ணீர் கசிந்துள்ள நிலையில் புயலும் அச்சுறுத்துவ தால் சர்வதேச நாடுகளின் உதவியை ஜப்பான் அரசு நாடியுள்ளது.

2011 சுனாமியின்போது புகுஷிமா அணுஉலையில் கடல்நீர் புகுந்து அணுக் கசிவு ஏற்பட்டது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வசித்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்த அணுஉலை மூடப்பட்டு தற்போது சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஊழியர்களின் கவனக்குறை வால் ஒரு அணுஉலையில் இருந்து கதிர்வீச்சுக்குள்ளான தண்ணீர் கசிந்து வருகிறது. இதுவரை சுமார் 430 லிட்டர் தண்ணீர் வெளியேறியுள்ளது.

அபாயகரமான இந்த நீர் கடலில் கலப்பதைத் தடுக்க சர்வதேச நாடுகளின் உதவியை ஜப்பான் கோரியது. இதைத் தொடர்ந்து சர்வதேச அணுசக்தி முகமை விஞ்ஞானிகள் புகுஷிமாவில் முகாமிட்டு கதிர்வீச்சுக்குள்ளான தண்ணீரை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நீர் கடலில் கலப்பதைத் தடுக்க பிரமாண்ட ஐஸ்கட்டி சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

புயல் அச்சுறுத்தல்

இந்நிலையில் பசிபிக் கடலில் உருவாகியுள்ள “விப்ஹா” புயல் புகுஷிமாவை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்தப் புயல் புதன்கிழமை கரையைக் கடக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. புயல் பாதிப்பால் ராட்சத அலை கள் அணுஉலைக்குள் புகுந்து விடாமல் தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜப்பான் அரசு மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அணுஉலையின் செய்தித் தொடர்பாளர் பேசியபோது “கதிர்வீச்சுக்குள்ளான தண்ணீர் கடலில் கலக்காமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை களையும் கையாண்டுள்ளோம், 24 நேரமும் அணுஉலையையும் புயல் போக்கையும் கண்காணித்து வருகிறோம்” என்றார்.

இப்போதைய நிலவரப்படி புகுஷிமாவில் நிலைமை கட்டுக்குள் இல்லை. அங்கு பாதுகாப்பான சூழ்நிலை திரும்ப ஓராண்டு ஆகலாம் என்று சர்வதேச விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x