Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM

சீனாவில் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் - ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு

நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை தடுத்து நிறுத்திட அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை செவ்வாய்க்கிழமை அறிவித்தது கம்யூனிஸ நாடான சீனா.

நாட்டின் பொருளாதாரத்தில் அரசுத்துறையின் ஆதிக்கம் எப்போதும் போலவே இருக்கும். 1978ல் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த சீர்திருத்தங்கள் அமைகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரியத் தொடங்கியதை அடுத்து அதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள அடுத்த 10 ஆண்டு காலத்துக்கான இந்த நடவடிக்கைகளுக்கு ஆளும் கம்யூனிச அரசின் மேலிடத் தலைவர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

இரு இலக்கத்தில் இருந்த வளர்ச்சி விகிதம் கடந்த இரு ஆண்டுகளில் ஒரு இலக்க எண்ணுக்கு குறைந்து போனது. இது ஆட்சியாளர்களை கலக்கமடையச் செய்தது.

பொதுவுடமை கொள்கையை மேம்படுத்துவதும் நாட்டின் ஆளுமை முறையையும் திறனையும் நவீனப்படுத்துவதுமே இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் நோக்கம் என 376 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா கடந்த 10 ஆண்டுகளாகவே திறந்தநிலை பொருளாதார அமைப்பாக உருவாகி வருகிறது. எனினும் பொதுவுடைமை கொள்கையை எப்போதும் போல கட்டிக்காப்போம் என சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பொதுவுடமை கொள்கையில் எப்போதுமே சீனா முதல்தர நிலையில் இருக்கும் என்பது மட்டும் அல்லாமல் நீண்ட நெடுங்காலத்துக்கு அதை கட்டிக்காக்கும். முக்கியத்துவம் மிக்க இந்த அடிப்படை உண்மைக்கு அடித்தளமிடுவதாக சீர்திருத்தங்கள் இருக்கும்.

பொருளாதார சீர்திருத்தம் முக்கியமானது. அதற்கான அடிப்படைத் தீர்வு வளங்களை ஒதுக்கீடு செய்யும்போது சந்தை முடிவு செய்ய வழி செய்து அரசுக்கும் சந்தைக்கும் இடையில் சரியான உறவை ஏற்படுத்துவதாகும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்அதிகார அமைப்பான பிளீனத்தில் சீர்திருத்தம் பற்றி 4 நாள்கள் ஆலோசனை நடந்தது. பல்வேறு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி இதில் விவாதிக்கப்பட்டது.

நிலத்தை தனியார் உரிமையாக்கிக் கொள்ளும் அதிகாரம் சீனாவில் முழுமையான அளவில் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. சொத்துகள் அனைத்துக்கும் அரசே முழு உரிமைதாரர் என்ற நிலைதான் இருக்கிறது. எனினும் நிலங்களை வாங்குபவர்கள் நீண்டகால குத்தகை அடிப்படையில் அதை அனுபவிக்க முடியும். சொத்து உரிமை மாற்றம் தனியார் பெயரில் அனுமதிக்கப்படுவதில்லை. பல்வேறு வகைகளில் உரிமைதாரராக இருக்க புதிய திட்டம் கொண்டுவந்து பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது.

சொத்துரிமை பாதுகாப்பு முறை மேம்படுத்தப்படும். நவீன தொழில்முறை கொள்கைகளை அரசுநிறுவனங்கள் கையாளும். எனினும் அரசுத்துறையின் ஆதிக்கம் எப்போதும்போல தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கட்சிக் கொள்கையில் தீவிரப்பற்றுடன் இருப்போர் வரவேற்றுள்ளனர். அரசுநிறுவனங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளை வாங்கி வலிமைவாய்ந்த நிறுவனங்களாக திகழ்கின்றன.

பொதுவுடைமை சந்தை பொருளாதாரத்தில் அரசு மற்றும் அரசு சாரா துறைகள் முக்கிய அங்கமாகவும் பொருளாதார சமூக முன்னேற்றத்துக்கு ஆதாரமாகவும் விளங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x