Published : 31 Dec 2013 12:00 AM
Last Updated : 31 Dec 2013 12:00 AM
இந்தியத் தூதர் தேவயானி கோப்ர கடே கைது விவகாரத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்பது மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அந்த நாட்டின் மூத்த எழுத்தாளர் ரூபன் நவரத்தே யோசனை தெரிவித்துள்ளார்.
சிஎன்என் இணையதள பத்தி எழுத்தாளர், ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பல்வேறு நாளிதழ்களில் பத்தி எழுத்தாளராக பணியாற்றி வரும் ரூபன், சமூக பிரச்சினைகள் தொடர்பாக நூல்களையும் வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் பத்திரிகை நிருபராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இப்போது அமெரிக்காவின் மிகச் சிறந்த அரசியல் கணிப்பாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.
மெக்ஸிகோவை பூர்விகமாகக் கொண்ட அவர், ஆசிய மக்களுக்கு எதிரானவர் என்றும் அவர் மீது பலமுறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. பன்முகத்தன்மை கொண்ட அவர், இந்தியத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகர் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவத்துக்குப் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் போரில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்நிலையில் இந்தியத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டது விரும்பத்தகாத ஒரு சம்பவம். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவிடம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை இழக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கவாழ் இந்தியரான சுசித்ரா விஜயன் என்ற பத்தி எழுத்தாளரும் தேவயானி கைது விவகாரத்தைக் கண்டித்துள்ளார்.
இந்தியத் தூதர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தூதரக அதிகாரி என்ற முறையில் அணுகியிருக்க வேண்டும். அவரை கைவிலங்கிட்டு கைது செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் விரைவில் சுமுக சூழ்நிலை ஏற்படும் என நம்புகிறேன் என சுசித்ரா விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT