Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM
காமன்வெல்த் அமைப்பை தண்டனை அளிக்கிற அமைப்பாகவோ அல்லது குற்றம் குறை கண்டறிந்து தீர்ப்பு வழங்கும் அமைப்பாகவோ மாற்ற வேண்டாம் என்றார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே.
கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 3 நாள் காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு வந்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்களை வரவேற்று அதிபர் ராஜபக்சே பேசினார்.
மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு பதில் சொல்ல எதுவும் இல்லை என்ற தமது தரப்பு நிலையை மீண்டும் உறுதிப்படுத்திட அதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
இந்த மாநாட்டில் இரு தரப்பு சார்ந்த விவகாரங்களை எழுப்புவதை தவிர்க்கவேண்டும். பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு பிரச்சினை களை எழுப்பி அதற்கான தீர்வு காண விவாதிக்கும் அமைப்பாக இந்த மாநாடு அமைய வேண்டும்.
காமன்வெல்த் அமைப்பானது, ஒற்றுமை ஏற்படுத்தும் தனித்துவ அமைப்பாக இருக்க வேண்டும். மாறாக பிரிவினைக்கு வழிவகுக்கும் செயல்களில் ஈடுபடுவதும் இதைச் செய் அதைச் செய் என்று ஆணையிடும் அமைப்பாகவும் செயல்படுவது கூடாது என்றார் ராஜபக்சே.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் புகார் பற்றி மாநாட்டில் எழுப்ப உள்ளதாக பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில் ராஜபக்சே தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
30 ஆண்டுகால இனப்போரை முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றியை சாதித்ததையும் இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதையும் பெருமைபட தனது உரையில் குறிப்பிட்டார் அவர்.
உச்சி மாநாடு நடத்திட இலங்கை மீது நம்பிக்கை வைத்த காமன்வெல்த் நாடுகளுக்கு தனது உரையில் ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.
30 ஆண்டுகளாக இனப்போரால் துவண்டு சின்னாபின்னமடைந்த இலங்கையில் இப்போதுதான் அமைதி யும், ஸ்திரத்தன்மையும் தவழ்கிறது. அந்த மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறோம். மனித உரிமைகளுக்கு இலங்கை எப்போதும் முக்கியத்துவம் தந்து வரு கிறது. மக்களின் வாழ்வுரிமையை அரசு மறுத்ததில்லை. இலங்கையில் கடந்த 4 ஆண்டுகளில் பயங்கரவாத சம்பவம் நடந்ததாக ஒன்றைக்கூட சுட்டிக்காட்ட முடியாது என்றும் ராஜபக்சே கூறினார். அப்போது அரங்கிலிருந்து கர ஒலி எழும்பியது.
காமன்வெல்த் அமைப்பானது இன்றைய கால கட்டத்துக்கும் பொருந்தக் கூடியதாக நீடிக்க வேண்டும் என்றால் அதில் இடம் பெற்றுள்ள நாடுகள், தமது மக்களின் தேவைகளை நிறைவேற்றிடச் செய்வது அவசியம். காமன்வெல்த் அமைப்பின் மரபை மீறி இரு தரப்பு சார்ந்த பிரச்சினைகளை இதன் விவாதத்தில் கொண்டு வந்து தண்டனை தரும் அமைப்பாகவோ அல்லது குற்றம் குறை கண்டுபிடிக்கும் அமைப்பாகவோ காமன்வெல்த் அமைப்பை மாற்றக்கூடாது என்றும் ராஜபக்சே கேட்டுக்கொண்டார்.
ஒருவன் கடந்த காலத்தில் என்ன செய்யவில்லை என்பதை பார்க்காமல் என்ன செய்திருக்கிறான் என்பதில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்கிற புத்தரின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டினார்.
மக்கள் நலன், பாதுகாப்பான குடிநீர், வறுமை ஒழிப்பு போன்ற அடிப்படை பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் செயல்பட வேண்டும் என்றார் ராஜபக்சே. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லக்கூடாது என ஒன்றுபட்டு நின்று எதிர்ப்பு தெரிவிக்கவே மாநாட்டுக்குச் செல்வதில்லை என்ற முடிவை எடுத்தார் பிரதமர். ராஜபக்சே யின் தொடக்கவுரையை கேட்க சல்மான் குர்ஷித், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் வந்திருந்தனர்.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பங்கேற்காததால் அவரது பிரதிநிதியாக வந்துள்ள நாடாளுமன்ற செயலர் தீபக் ஒபராய், மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் அருண் புலேல் உள்ளிட்டோரும் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஹார்பர், அடுத்த காமன்வெல்த் உச்சி மாநாடு நடத்தவுள்ள மொரீஷியஸின் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் ஆகியோர் இலங்கை மீதான மனித உரிமை மீறல் புகார் காரணமாக கொழும்பு மாநாட்டை புறக்கணித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நேரடி யாக குறிப்பிடாமல், சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு சவால்களை இலங்கை எதிர்கொண்டது. இப்போது அவற்றிலிருந்து விடுதலை பெற்றுள்ளது என்றார்.
மாநாட்டை தொடங்கினார் சார்லஸ்
பிரிட்டிஷ் ராணி எலிசபெத் (87) சார்பில் அவரது பிரதிநிதியாக இளவரசர் சார்லஸ், பங்கேற்றார். காமன்வெல்த் அமைப்பின் 22வது உச்சி மாநாட்டை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி உள்பட கடந்த ஆண்டுகளில் வெவ் வேறு சவால்களை இலங்கை எதிர் கொண்டது.இவற்றால் ஏராளமானோர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வேண்டி வந்தது என்றார். 53 உறுப்பு நாடுகளை கொண்ட காமன்வெல்த் மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
காமன்வெல்த் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப்பேசி பொருளாதார மேம்பாடு, 2015க்குப்பிந்தைய வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிடுவார்கள். பிடிஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT