Published : 16 Mar 2014 11:00 AM
Last Updated : 16 Mar 2014 11:00 AM
இலங்கை கிளிநொச்சி மாவட்டத் தில் தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்த ஒரு பெண்ணும் அவரது 13 வயது மகளும் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்ட னம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை ஜெனி வாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் அது எழுப்பியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் தர்மபு ரத்தில் வியாழக்கிழமை இரவு பாலேந்திரன் ஜெயகுமாரி என்பவரையும் அவரது மகள் விபுசிகாவையும் போலீஸார் கைது செய்தனர்.
விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவரை தேடுவது போல போலீஸார் இவர்களின் வீட்டை சுற்றி வளைத்து பலமணி நேரம் அங்கேயே சூழ்ந்து நின்று பின்னர் கைது செய்தனர். இந்த விவகாரத்தை ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினர் ஆனந்தி சசீதரன் எழுப்பினார்.
இந்நிலையில், ஜெயகுமாரி கிளிநொச்சி மாஜிஸ்திரேட்டிடம் வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டதாகவும் அவரது மகள் குழந்தைகள் காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டதாகவும் காவல்துறை செய்தித்தொடர்பாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஜெயகுமாரி வீட்டீல் திடீரென துப்பாக்கியால் சுடப்படும் கேட்ட தாகவும் பின்னர் அங்கிருந்து விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் தப்பிச் சென்றதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கித் தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனந்தி சசீதரன் ஜெனிவா வில் பேசும்போது, இந்த கூட்டத் தொடரில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் திருப்திகரமாக இல்லை என தமிழர்கள் ஏமாற்றத்துடன் இருப் பதாக தெரிவித்தார். ஆனந்தி சசீதரனின் கணவர் கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்தவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசி கட்டப்போரின் போது இலங்கை ராணுவம் இழைத்த மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஜெனிவா கூட்டத்தில் ஆனந்தி சசீதரன் வலியுறுத்தினார்.
இந்த மாத இறுதிவாக்கில் இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இலங்கை யில் நடந்த மனித உரிமை மீறல் கள் பற்றி நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்கிற உலக நாடுகளின் கோரிக்கைக்கு ஒப்புதல் கோருகி றது இந்த தீர்மானம்.
இதனிடையே, உள்நாட்டுப் போரின் போது காணாமல்போன உறவினர்கள் பற்றி வெளியில் யாரும் வாய் திறக்கக்கூடாது என தொடர்ந்து மிரட்டி வரும் அரசின் ஒரு செயல்தான் பாலேந்திரன் ஜெயகுமாரியும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கை என மனித உரிமை ஆர்வலர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஜெயகுமாரியின் வீட்டின் முன் வியாழக்கிழமை இரவு திரண்ட நூற்றுக்கணக்கான போலீஸார் பல மணி நேரமாக அங்கேயே முகாமிட்டு அந்த பெண்ணையும் அவரது மகளையும் கைது செய்த தாக ஒருவர் தெரிவித்தார். தனது பெயர் அம்பலமானால் தன்னையும் கொடுமைப்படுத்து வார்கள் என அந்த நபர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்திருந்த தனது 15 வயது மகனை 2009ல் சண்டை முடிந்ததும் ராணுவத்திடம் ஒப்படைத்தார் ஜெயகுமாரி. அவனை விடுதலை செய்யும்படி அவர் கோரி வருகிறார். போரின்போது காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை துணிச்சலுடன் அதிகாரிகளிடம் கோரிவந்தனர் இந்த இருபெண்களும். போராட்டங்களில் இவர்கள் பங்கேற்றிருப்பது பத்திரிகை களில் வெளியாகின. மேலும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த ஆண்டு இலங்கை வந்தபோது அவரிடம் இவர்கள் முறையிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT