Last Updated : 20 Oct, 2013 05:57 PM

 

Published : 20 Oct 2013 05:57 PM
Last Updated : 20 Oct 2013 05:57 PM

யாரும் கைத்தட்டக் கூடாது…

பெலாரஸின் விக்டோரியா அசரென்காவைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் லூகாஸ்கென்கோவை நமக்குத் தெரியாது.

டென்னிஸ் போட்டிகளில் பட்டங்கள் பல வென்ற காரணத்தால் பத்திரிகைகள் அதிகம் இ(ப)டம் கொடுத்தன. அதனால் அசரென்காவை அறிவோம். அந்த கிரிகோரிவிச் லூகாஸ்கென்கோ அப்படி என்ன சாதனை படைத்துவிட்டார், அவரை நாம் தெரிந்து வைத்திருக்க? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது.

ஜனநாயகம் என்பதே உயிர்மூச்சு என்று உயர்த்திப் பிடிக்கும் ஐரோப்பிய கண்டத்தில் ஐரோப்பாவின் கடைசி 'சர்வாதிகாரி' என்ற பெயருடன், 1994 முதல் இப்போது வரை அசைக்கமுடியாத அதிபராக இருப்பது சாதனை தானே.

சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று மேற்கத்திய நாடுகள் பலமுறை குற்றம்சாட்டியபோதும், நாட்டின் நிச்சயமற்றதன்மை நிலவாமல் இருப்பதற்கு ஒரே மாற்று எனது கொள்கைகளும், ஆட்சிமுறையும்தான் காரணம் என்று அழுத்தம் திருத்தமாக பதிலடி கொடுத்தார் கிரிகோரிவிச்.

2006-ல் நடைபெற்ற பெலாரஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற மக்களுக்கு வலி கொடுக்கும் சில பிரத்யேக வழிமுறைகளைக் கையாண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பொறுத்துக் கொள்ளுமா அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும், மனிதஉரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல சர்வதேசத் தடைகள் பெலராஸ் மீது விதிக்கப்பட்டன.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று பெலாரஸ் என்பதைக் குறிப்பிட வேண்டிய இடம் இது. ஆனால் சோவியத்தில் இருந்து பிரிந்த நாடுகளைப்போல பெலாரஸில் தனியார்மயம் அதிகம் கிடையாது. அரசின் கட்டுப்பாட்டில்தான் அனைத்து துறைகளும். சோவியத் யூனியனில் இருந்து பெலாரஸை பிரிக்கத் தீர்மானம் கொண்டுவந்தபோது பெலாரஸில் அதனை எதிர்த்த ஒரே மக்கள் பிரதிநிதி கிரிகோரிவிச். அந்த அளவுக்கு சோவியத் விசுவாசி.

சோவியத் யூனியனின் முன்னாள் ராணுவ வீரரான அவர் எப்போதும் தன்னை பெலா'ரஷிய'னாக அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடியவர். ரஷிய அதிபர் புதினுக்கும் நெருக்கமானவர். 1994-ம் ஆண்டு முதல் இப்போதுவரை 4 முறை பெலாரஸில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ள அனைத்திலும் வெற்றி கிரிகோரிவிச்சுக்குதான்.

தாற்காலிகம், இடைக்காலம் என்று வேறுயாரும் அதிபர் நாற்காலி அருகே கூட சென்றது இல்லை. பெலாரஸில் சிறிதும், பெரிதுமாக 25-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், அலெக்சாண்டர் கிரிகோரிவிச் எந்தக் கட்சியையும் சாராதவர். அதிபர் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர். 2007-ல் கிரிகோரிவிச்சை ஆதரிப்பதற்காகவே பெலாய் ரஷ் கட்சி தொடங்கப்பட்டது.

இந்த சாதனைகளையெல்லாம் விடுங்கள் அவரது சமீபத்திய சாதனை அமைதிக்கான 'இக் நோபல்' பரிசை வென்றுள்ளதுதான். நோபல் பரிசு தெரியும் இது என்ன இக் நோபல். நோபல் பரிசை கிண்டல் செய்வதோ, அல்லது அதன் மதிப்பைக் குறைப்பதோ இக் நோபலின் நோக்கமல்ல. மக்களை சிரிக்க வைத்து அதே சமயம் சிந்திக்க வைப்பவர்கள். நகைச்சுவையாக நடந்து கொண்டாலும், மக்கள் பணி செய்திருப்பவர்களுக்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒரு விருதுதான் இக் நோபல்.

இந்த ஆண்டு கிரிகோரிவிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம் 2011-ம் ஆண்டில் பெலாரஸில் பொது இடத்தில் கைத்தட்ட தடைவிதித்து அவரிட்ட விசித்திர உத்தரவுதான். 2011-ல் டுனீசியா, லிபியா, எகிப்து, சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சித் தீ, பெலாரஸிலும் லேசாக எட்டிப் பார்த்தது. அத்தீயை ஊதி அணைக்க அலெக்சாண்டர் லூகாஸ்கென்கோ எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றுதான் பொது இடத்தில் கை தட்ட விதிக்கப்பட்ட தடை.

அப்போது பெலாரஸில் அதிபருக்கு எதிராக தெருக்களில் ஊர்வலம் நடத்திய எதிர்ப்பாளர்கள், கைத்தட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததே தடைக்கு முக்கியக் காரணம். அப்போது ஒரு கை மட்டுமே இருந்த ஒருவர் பொது இடத்தில் கைத்தட்டினார் என்று நீதிமன்றம் தண்டனை வழங்கிய காமெடியெல்லாம் நடந்தது. கேட்பதற்கு நூதனமாக இருந்தாலும் போராட்டத்தை முறியடித்து இப்போதுவரை ஆட்சியில் உள்ளார் கிரிகோரிவிச்.

கைதட்ட அவர் விதித்த தடை கேலிக்கு இடமாக இருந்தாலும், பெலாரஸை பொருளாதார ரீதியாக வலுவாக்கியதிலும், அதனை இப்போதும் தொடர்ந்து நிலை நிறுத்தி வருவதும் கிரிகோரிவிச்சின் சாதனை என்று அவரை விருதுக்கு தேர்வு செய்த குழுவினர் புகழ்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x