Published : 28 Oct 2013 10:14 AM
Last Updated : 28 Oct 2013 10:14 AM

பெரு நாட்டில் இந்தியக் கலாசாரத் திருவிழா தொடங்கி வைத்தார் ஹமீது அன்சாரி

பெரு நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, தலைநகர் லிமாவில் இந்திய கலாசார திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பெரு நாட்டு துணை அதிபர் மரிசோல் எஸ்பினோஸாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அன்சாரி தனது பெரு பயணத்தை முடித்துக் கொண்டு கியூபாவுக்கு செல்ல உள்ள நிலையில் ஒரே நேரத்தில் அங்கும் இதுபோன்ற கலாசார திருவிழா நடைபெறுகிறது.

வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இவ் விழாவில் பரத நாட்டியம், கதக், ஒடிசி, மணிபுரி, கதகளி மற்றும் சாவ் ஆகிய 6 வகையான இந்திய நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தாதாசாஹெப் பால்கேவின் ராஜா ஹரிச்சந்திரா முதல் ராஜ் கபூரின் பாபி மற்றும் ஆமிர் கானின் தரே ஜமீன் பர் வரையிலான பழைய மற்றும் புதிய இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சத்யஜித் ரேயின் கரே-பைரே, ஷாருக் கானின் கபி ஹான், கபி நா, கோவிந்த் நிலானியின் அர்த் சத்யா மற்றும் நீரஜ் பாண்டேயின் ஓ வென்ஸ்டே ஆகிய திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. இந்திய கலாசார விழா, திரை விழா, நடன விழா மற்றும் இலக்கிய விழா ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என அந்நாட்டு கலாசாரத் துறை செயலாளர் ரவீந்திர சிங் கூறியுள்ளார்.

பெருவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோரா கூறுகையில், "உணவுப் பொருள் முதல் இசை வரை, யோகா, ஆன்மிகம், நடனம் மற்றும் திரைப்படங்கள் உள்பட இந்திய கலாசாரத்தின் அனைத்து வடிவங்களையும் தெரிந்துகொள்ள பெரு நாட்டு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்" என்றார்.

இந்திய குடியரசு துணைத்தலை வர் ஒருவர் பெருவுக்கு சென்றி ருப்பது இதுவே முதன்முறை. இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், கலாசாரம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரு அதிபர் ஒல்லண்டா ஹுமலா, வெளியுறவு மற்றும் வெளியுறவு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் உள்ளிட்டோரையும் அன்சாரி சந்தித்து பேசுகிறார்.

இந்திய வர்த்தகக் கூட்டமைப்பை அங்கு நிறுவுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறையை லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலப்படுத்துவதற்கு இந்த அமைப்பு உதவும்.

பெரு நாட்டுடனான உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்சாரி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பெரு நாட்டுடனான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடியாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x