Published : 04 Oct 2013 12:10 PM
Last Updated : 04 Oct 2013 12:10 PM
ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே நட்பு மலருவதைப் பார்த்து இஸ்ரேல் ஆத்திரமும், கலக்கமும் அடைந்துள்ளது என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் ஒன்றில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பேசுகையில், “அணு ஆயுதம் தயாரிக்கும் பணியில் ஈரான் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை மேலும் கடுமையாக்க வேண்டும். ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம். இந்த விவகாரத்தில் இஸ்ரேல் தனித்து விடப்பட்டால், ஈரானை தனியாகவே நின்று எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
இஸ்ரேல் பிரதமரின் இந்த பேச்சு குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறியிருப்பதாவது: அமைதியை விரும்பும் ஈரானின் எண்ணத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டன. தனது முனை மழுங்கிய வாளுக்கு (வாதத்துக்கு) மாற்றாக தர்க்க ரீதியாக உலக நாடுகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டதை இஸ்ரேலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அந்நாடு கலக்கமும் ஆத்திரமும் அடைந்துள்ளது.
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அக்டோபர் மாத மத்தியில் ஜெனீவாவில் வல்லரசு நாடுகளுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றோ, போரில் ஈடுபட வேண்டும் என்றோ நினைத்தவர்களின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்படும்” என்றார் ரூஹானி.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற ரூஹானி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பேசும்போது, “அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் ஈரானுக்கு இல்லை. இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சு நடத்தத் தயார்” என்றார்.
அதைத் தொடர்ந்து ரூஹானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்ற அதிபர் ரூஹானியின் நிலைப்பாட்டுக்கு ஈரான் ராணுவத் தலைமைத் தளபதி ஹசன் ஃபிரோஷாபாதியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT