Published : 20 Nov 2013 09:28 PM
Last Updated : 20 Nov 2013 09:28 PM

சக்காரோவ் மனித உரிமை விருது மலாலாவிற்கு ஐரோப்பா கௌரவம்

பெண் கல்விக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் போராடி வரும் சிறுமி மலாலாவிற்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம், அதன் உயரிய விருதான சக்காரோவ் மனித உரிமை விருது தந்து கௌரவித்துள்ளது. ஸ்ட்ராஸ்பெர்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருது அளிக்கப்பட்டது.

மலாலா பேசுகையில் இந்த விருதை பாகிஸ்தானின் கவனிக்கப்படாத நாயகர்களுக்கு அர்ப்பணம் செய்வதாகக் கூறினார், மேலும் ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பாவைத் தாண்டி, பல நாடுகளில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்டு வாழும் மக்களையும் கவனத்தில் கொண்டு, உதவும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

16 வயதான மலாலா, 2009ஆம் ஆண்டு, பிபிசி உருது பிரிவுக்காக எழுதிய கட்டுரையில், தாலிபான் ஆட்சியில் வாழ்வதைப் பற்றியும், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் வாழும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதைப் பற்றியும் மலாலா எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம், அங்கிருந்த தாலிபான் தீவிரவாதிகளை வெளியேற்றியது. இதன் மூலம், பல உலக நாடுகளின் கவனம் மலாலாவின் பக்கம் திரும்பியது.

சென்ற வருடம் பஸ்ஸில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது, தாலிபான்களால், மலாலா சுடப்பட்டார். அவருக்கு பர்மிங்கம் நகரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். தொடர்ந்து பெண் கல்விக்காகவும், பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுத்து வரும் மலாலா, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோவியத்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரேய் சக்காரோவின் நினைவாக, ஒவ்வொரு வருடமும், ஐரோப்பிய நாடாளுமன்றம் இவ்விருதை வழங்குகிறது. 50,000 யூரோ சன்மானமாக வழங்கப்படும் இவ்விருது, ஐரோப்பாவின் சிறந்த மனித உரிமை விருதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னர், இவ்விருதை, தென் ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, மியான்மரின் ஆங் சான் சூகி ஆகியோர் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x