Published : 22 Mar 2014 06:15 PM
Last Updated : 22 Mar 2014 06:15 PM
ஆஸ்திரேலியா அருகே தெற்கு இந்திய பெருங் கடலில் 74 அடி நீளம் 43 அடி அகலம் கொண்ட உடைந்த துண்டு மிதப்பதை சீன செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. அது மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என கருதப்படுவதால் அந்தப் பகுதிக்கு போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.
இதுகுறித்து மலேசிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் டாடக் செரி ஹிஸ்காமுதின் டன் ஹூசைன் கோலாலம்பூரில் சனிக்கிழமை கூறுகையில், ‘‘சீன செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ள உடைந்த துண்டு மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்தப் பகுதிக்கு போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. உடைந்த துண்டை கண்டுபிடித்து ஆய்வு செய்த பின்னரே உறுதியாக எதையும் கூற முடியும்’’ என்று தெரிவித்தார்.
தெற்கு இந்திய பெருங்கடலில் 78 அடி நீளத்தில் ஒரு துண்டும், 6 அடி நீளத்தில் மற்றொரு துண்டும் மிதப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆஸ்திரேலிய விமானப் படை அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாள்களாக அங்கு தேடியும் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலிய விமானப் படை சுட்டிக் காட்டிய இடத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் 74 அடி நீளம் 43 அடி அகலம் கொண்ட உடைந்த துண்டு மிதப்பதை சீன செயற்கைக்கோளான ‘ஜியோபென்-1’ இப்போது கண்டுபிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா வெளியிட்ட செயற்கைக்கோள் படம் மார்ச் 16-ம் தேதி எடுக்கப்பட்டதாகும். சீன செயற்கைக்கோள் படம் மார்ச் 18-ம் தேதி பதிவானதாகும்.
படம் எடுக்கப்பட்டு சில நாள்களாகிவிட்டதால் அந்த துண்டுப் பாகங்கள் கடலில் 250 கிலோ மீட்டர் தொலைவுக்கு எங்காவது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நாலாபுறமும் தேடுதல் எல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பியர்ஸ் விமான தளத்தில் இருந்து தெற்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு சனிக்கிழமை அணி அணியாக போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
ஆஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் குறிப்பிட்ட கடல் பகுதியில் தற்போது சில சரக்குக் கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. சீனா, மலேசியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகள் அனுப்பிய போர்க்கப்பல்களும் அந்தப் பகுதியை நெருங்கிவிட்டன. போர்க்கப்பல்கள் அங்கு முகாமிட்ட பிறகு தேடுதல் பணி இன்னும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15-வது நாள்
கடந்த மார்ச் 8-ம் தேதி 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. 15 நாள்கள் ஆகியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
விமானத்தின் கருப்புப் பெட்டி பேட்டரிகள் 30 நாள்கள் மட்டுமே இயங்கும். அதன்பின் பேட்டரிகள் செயலிழந்து சிக்னல் கிடைக்காது. எனவே, இன்னும் 15 நாள்களுக்குள் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும், இல்லையெனில் ஆழ்கடலில் அதனை தேடுவது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT