Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM

உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை: பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை

உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையை பிரான்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். பிரான்ஸை சேர்ந்த 75 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் இயங்கக்கூடிய செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உயிரி மருந்தியல் நிறுவனமான கார்மட் இந்த செயற்கை இதயத்தை வடிவமைத்துள்ளது. இந்த இதயம் லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. பேட்டரியை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும்.

உயிரி பொருள்களுடன் மாட்டின் திசுக்களும் கொண்டு செயற்கை இதயம் உருவாக்கப்பட்டுள்ளதால், இதனை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் பயன்படுத்தப்படாமல் மாட்டின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டதால், ரத்தம் உறைந்து கட்டியாவதும் தடுக்கப்படுகிறது.

இந்த முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை பாரீஸில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனையில் நடைபெற்றது என ‘தி டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிகப் பயன்பாட்டுக்கு மட்டுமே ஏற்றவை. கார்மட் நிறுவனம் வடிவமைத்துள்ள செயற்கை இதயம் 5 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும்.

ஆரோக்கியமான மனிதனின் இதயத்தின் எடை 250 முதல் 350 கிராம் வரை இருக்கும். செயற்கை இதயம் அதைவிட மூன்று மடங்கு அதிகமாக அதேசமயம் ஒரு கிலோவுக்கு கொஞ்சம் குறைவான எடையுடன் இருக்கும்.

‘கார்மட் நிறுவனம் உருவாக்கிய செயற்கை இதயத்தை, டென்மார்க்கைச் சேர்ந்த ஐரோப்பிய ஏரோநாட்டிக் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனம் (இஏடிஎஸ்) மேம்படுத்திக் கொடுத்தது. இந்த செயற்கை இதயம் அறுவைச் சிகிச்சைக்குப் பின் மிக நல்லமுறையில் செயல்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்மட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மார்செலோ கான்விடி கூறுகையில், “தற்போதுதான் அறுவைச் சிகிச்சை முடிந்திருக்கிறது. இன்னும் உறுதியான முடிவுக்கு வர இயலாத போதும் இந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை எங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x