Published : 20 Mar 2014 12:20 PM
Last Updated : 20 Mar 2014 12:20 PM
மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தியப் பெருங் கடலில் மிதப்பதை ஆஸ்திரேலிய விமானப் படை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டு பிடித்துள்ளது. எனினும் அவற்றை ஆய்வு செய்த பின்னரே உறுதியாக கூறமுடியும் என்று அந்த நாட்டு விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ பகுதிக்கு ஆஸ்தி ரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 போர் விமானங்கள் விரைந்துள்ளன. இவை தவிர ஆஸ்திரேலிய போர்க் கப்பல்களும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
டோனி அபோட் தகவல்
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நாடாளு மன்றத்தில் நேற்று பேசியபோது, தென் இந்திய பெருங்கடலில் 2 உடைந்த துண்டுகள் மிதப்பதை செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடித்துள்ளோம், அவை மலேசிய விமானத்தின் பாகங்களா என்பதை ஆய்வு செய்த பின்னரே தெளிவுபடுத்த முடியும் என்றார். இதுகுறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிடம் தொலைபேசியில் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் வால் பகுதி?
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கில் 2500 கி.மீட்டர் தொலைவில் 2 பாகங்கள் செயற்கைக்கோளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் ஒரு பாகத்தின் நீளம் 78 அடியாக உள்ளது. அநேகமாக அந்தப் பாகம் விமானத்தின் வால் பகுதியாக இருக்கக்கூடும். மற்றொரு உடைந்த துண்டு அதைவிட சிறியதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய விமானப் படை கமாண்டர் ஜான் மெக்கரே தெரி
வித்துள்ளார். பெர்த் பகுதியில் இருந்து புறப்பட்ட ஆஸ்திரேலிய போர் விமானங்கள் 4 மணி நேரத்தில் சம்பவ இடத்தை சென்றடைந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக செயற்கைக்கோளில் அடையாளம் காணப்பட்ட உடைந்த பாகங்களை தேடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மலேசிய கடற்படை சார்பில் 6 போர்க் கப்பல்கள், 3 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத் துக்கு அனுப்பப் பட்டுள்ளன.
மலேசிய அரசு விளக்கம்
மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் டாடக் செரி ஹிஸ்காமுதின் டன் ஹூசைன் நிருபர்களிடம் பேசியபோது, ஆஸ்திரேலிய விமானப் படை தெரிவித்துள்ள தகவல் நம்பத்தகுந்ததாக உள்ளது, எனினும் அதனை உறுதி செய்தால் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய விமானப் படை தகவலைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், நாட்டின் முப்படை தளபதிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சம்பவ பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுவது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
கருப்புப் பெட்டி தேடுதல்?
ஒருவேளை கடலில் மிதக்கும் 2 துண்டுகளும் விமானத்தின் பாகங்களாக இருந்தால் அந்த சுற்றுவட்டாரத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தொடங்கப்படும்.
இதுகுறித்து அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை முன்னாள் அதிகாரி மைக்கேல் டேனியல் கூறியதாவது: சம்பந்தப்பட்ட பகுதியில் சோனார் பயோ கருவிகள் மூலம் ரேடியோ அலைகள் கடலுக்கு அடியில் செலுத்தப்படும். அப் பகுதியில் கருப்புப் பெட்டி இருந்தால் சோனார் பயோஸ் கருவியில் சிக்னல் கிடைக்கும்.
விமானத்தின் கருப்புப் பெட்டி யில் உள்ள பேட்டரி 30 நாள்கள் வரை செயல்படும். எனவே சோனார் பயோஸ் கருவியின் ரேடியோ அலைகளுக்கு நிச்சயமாக சிக்னல் கிடைக்கும். எனினும் விமானத்தின் கருப்புப் பெட்டியை தேட எத்தனை நாள்களாகும் என்பதை கணிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
விசாரணையில் எப்.பி.ஐ. உதவி
மாயமான விமானத்தின் விமானி ஜகாரி அகமது ஷா தனது வீட்டில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் சிமுலேட்டரை வடிவமைத்திருந் தார். அதனை மலேசிய போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் விமான நிலைய ஓடுபாதைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மேலும் சில பைல்கள் கடந்த பிப்ரவரியில் அழிக்கப்பட்டிருந்தன. அந்த பைல்களை மீண்டும் எடுக்க அமெரிக்காவின் எப்.பி.ஐ. புலனாய்வு அமைப்பு இப்போது உதவி செய்து வருகிறது.
தேடுகிறது நார்வே கப்பல்
நார்வே நாட்டைச் சேர்ந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற சரக்குக் கப்பல் மொரீஷியஸ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் விமான பாகங்கள் மிதப்பதாகக் கருதப்படும் கடல் பகுதியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சரக்குக் கப்பல் சென்றடைந்துள்ளது.
ஆனால் வியாழக்கிழமை முழுமையாக தேடுதல் பணியில் ஈடுபட முடியாது, சூரியன் மறைந்துவிட்டதால் வெள்ளிக்கிழமையில் இருந்துதான் தீவிரமாக தேட முடியும் என்று அந்த கப்பலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரிட்டன் போர்க்கப்பல்களும் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன.
விமான பாகங்கள் மிதப்பதாகக் கூறப்படும் கடல் பகுதியில் அலைகளின் ஆக்ரோஷம் அதிகமாக உள்ளது. ஒரு விநாடிக்கு ஒரு மீட்டர் தொலைவுக்கு பொருள்களை இழுத்துச் செல்லும் அலைகளின் ஆற்றல் உள்ளது. ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் படம் கடந்த 16-ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. எனவே 4 நாள்களுக்குள் உடைந்த பாகங்கள் தொலைதூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் தேடுதல் எல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT