Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM
அமெரிக்காவின் பெருந்தகவல் திரட்டு விவகாரம் வெளிப்பட்டபோது பிரான்ஸ்காரர்கள் தங்கள் கோபத்தை எல்லாம் வெளிப்படுத்தியிருந்தாலும் மின்னணுக் கண்காணிப்பைப் பொருத்தவரை அவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல. தேசியப் பாதுகாப்பு முகமையின் விவகாரம் கசிந்த சில நாட்களுக்கெல்லாம் அதைப் போலவே பிரான்ஸிலும் ஒரு தகவல் கண்காணிப்பு அமைப்பு இயங்குவது பகிரங்கப்படுத்தப்பட்டது.
உளவின் வரையறை
பொது விவாதத்துக்கு உட்படுத்தாமல் கடந்த வாரம் மின்னணுக் கண்காணிப்புச் சட்டத்துக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இது பிரெஞ்சு குடிமக்கள், தொழில்துறையினர் ஆகியோரையும் கண்காணிக்கக்கூடிய அளவில் விரிவடையக் கூடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். ராணுவச் செலவினங்கள் தொடர்பான மசோதாவின் ஒரு பகுதி என்று கருதத் தக்க இந்தச் சட்டம், தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள், இணையச் செயல்பாடுகள், தனிநபர்களின் இருப்பிடத் தகவல்கள் பிற மின்னணுத் தகவல்தொடர்புகள் போன்றவற்றை எந்தெந்தச் சூழ்நிலைகளில் உளவு முகமைகள் திரட்டலாம் என்று வரையறுக்கிறது.
நீதித் துறை கண்களுக்கு அப்பால்
நீதித் துறையின் மேற்பார்வைக்கு இந்தச் சட்டம் எந்த இடமும் அளிக்கவில்லை. மின்னணுக் கண்காணிப்பை விரிவான அளவில் அதாவது தேசியப் பாதுகாப்பு, பிரான்ஸின் அறிவியல் மற்றும் பொரு ளாதாரம் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தவும் தீவிரவாதத்தையும் குற்றங்களையும் தடுப்பதற்காகப் பயன்படுத்தவும் இந்தச் சட்டம் அனுமதியளிக்கிறது. ஆச்சரியம் அளிக்கும் விதத்தில், இணைய நிறுவனங்களும் பெருநிறுவனங்களும் ஒருங்கே இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன. தனிநபர்களின் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பு என்றும் வணிக நட வடிக்கைகளுக்கெதி ரான அச்சுறுத்தல் என்றும் இந்தச் சட்டத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள்.
மேலும் சில விதிமுறைகள்
2015வரை இந்தச் சட்டம் அமலுக்கு வராது என்றும் உளவுத்துறையின் ஆதிக்கத்தை இது ஒன்றும் விரிவுபடுத்த வில்லை என்றும் அரசு கூறுகிறது. இந்த அதிகாரங்கள் பல ஆண்டுகளாக இருந்த தால்தான் அவற்றுக்குத் தேவையான விதி முறைகளை இந்தச் சட்டம் தற்போது உருவாக்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
“தேசியப் பாதுகாப்பு என்பதன் கீழ் எதையும் கொண்டுவரக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்கிறார் க்ளமென்ஸ் பெக்தார்தெ. இவர் மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்புக்கான வழக்குரைஞராக இருக்கிறார். ஒரு இணையப் பயனாளி தொடர்பான, இணைய வலைப்பின்னலில் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுவதற்கான ஏகபோக உரிமையை அதிகார மட்டங்களுக்கு இந்தச் சட்டம் தந்துவிடும் என்று இணையக் கூட்டமைப்பு கூறுகிறது. அப்படிப்பட்ட கைப்பற்றல் நடவடிக்கைக்கு தற்போது சட்டபூர்வமான ஆணை தேவை என்றும் அது தெரிவிக்கிறது.
பிரான்ஸின் ‘தகவல்தொழில்நுட்பம் மற்றும் தகவல் சுதந்திரம் ஆகியவற்றுக்கான தேசிய ஆணையம்’ மக்களின் உரிமைகளையும் அந்தரங்கத்தையும் காப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு. இந்தச் சட்டத்தின் விவாதத்துக்குரிய சில பகுதிகள் தங்களுடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
அரசோ, பொதுமக்களின் பார்வைக்கு இந்தச் சட்டம் உட்படுத்தப்படு வதற்கு நாங்கள் ஒன்றும் முட்டுக்கட்டை போடவில்லை என்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த ழான் பியர் சூவர், “பிரஞ்சு உளவுத்துறை மேற்கொள்ளும் 200,000க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளுக்கு கூடுதல் உத்தரவாதத்தையும் கடுமையான விதிமுறைகளையுமே இந்தச் சட்டம் ஏற்படுத்துகிறது; தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நீதித்துறையின் மேற்பார்வை என்பது நடைமுறை சாத்தியமே இல்லை” என்கிறார்.
© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT