Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

தீவிரவாதிகளை ஒழிக்க ஆளில்லா விமான தாக்குதல் : நெறிப்படுத்த ஐ.நா.தீர்மானம்

தீவிரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல், சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொது சபையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேறியது.

ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தானில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து அடிக்கடி ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வரு வதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும் பலியாகி உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இத்தகைய தாக்குதல் இறையாண்மையை மீறும் செயல் என பாகிஸ்தான் கூறி வருகிறது.

இந்நிலையில்தான் ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்பாக முதன்முறையாக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எந்த ஒரு உறுப்பு நாடும், ஆளில்லா விமானத் தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாதத்துக்கு எதிரான எத்தகைய செயலில் ஈடுபட்டாலும், அது ஐ.நா. உரிமை ஆவணம், மனித உரிமை சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நாடுகள் சட்ட ரீதியாக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி ஐ.நா. பொது சபையில் பேசியபோது, அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து பிரச்சினை எழுப்பினார்.

"பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதும் இறையாண்மையை மீறிய செயலும் ஆகும். இதனால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.

மேலும், இத்தகைய செயல் தீவிரவாதத்துக்கு எதிரான செயல்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும்" என்று ஷெரீப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x