Published : 10 Mar 2014 08:19 AM
Last Updated : 10 Mar 2014 08:19 AM

மலேசிய விமானம் விழுந்தது எங்கே?- விமானப்படை தளபதி புதிய தகவல்

காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய விமானப் படை தலைமைத் தளபதி ரோட்சாலி தவுத் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

காணாமல்போன விமானத்தின் ரேடார் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதனை மீண்டும் கோலாலம்பூருக்கு கொண்டு வர விமானி முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது அதுகுறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அதுபோன்ற எந்தத் தகவலும் வரவில்லை. இது எங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனினும் ரேடார் பதிவு ஆய்வுகளின்படி விமானத்தை மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பியிருக்கலாம் என்று நம்புகிறோம். எனவே தேடுதல் எல்லையை வியட்நாம் முதல் மலேசிய எல்லைவரை விரிவுபடுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

நடுவானில் கடைசியாக தொடர்பு கொண்ட ஜப்பான் விமானி

ஜப்பானைச் சேர்ந்த விமானம் சனிக்கிழமை வியட்நாம் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தது. அப்போது வியட்நாம் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் கேட்டுக் கொண்டதின்பேரில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானியை ஜப்பான் விமானி அவசர அலைவரிசை மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

இதுகுறித்து அந்த ஜப்பான் விமானி கூறியதாவது:

நான் ஜப்பானின் நாரிடா நகருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச். 370 விமானத்தை தொடர்பு கொள்ளுமாறு வியட்நாம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன்படி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு அவசர அலைவரிசையில் மலேசிய விமானத்தை தொடர்பு கொண்டேன்.

வியட்நாம் எல்லைக்குள் வந்து விட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு எதிர்முனையில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.

அந்தக் குரல் விமானி ஜகாரியாக இருக்கலாம் அல்லது துணை விமானி பாரிக்காக இருக்கலாம். யார் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்களின் பதில் தெளிவாக கேட்கவில்லை. அதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஏர் பிரான்ஸ் விபத்து நினைவலைகள்…

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி 2 நாள்களாகவும் அதனை கண்டுபிடிக்க முடியாதது 2009-ல் நேரிட்ட ஏர் பிரான்ஸ் ஜெட்லைனர் விமான விபத்தை நினைவுபடுத்துகிறது.

2009 ஜூன் 1-ம் தேதி பாரிஸில் இருந்து பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவுக்கு சென்ற ஏர் பிரான்ஸ் பிளைட் 447 விமானம் 216 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் அட்லான்டிக் கடலில் விழுந்து மூழ்கியது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

ஐந்து நாள்களுக்குப் பிறகே விமானம் விழுந்த இடம் கண்டறியப் பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. சுமார் 50 உடல்கள் மட்டுமே கண்டெடுக் கப்பட்டன. அதன் பின்னர் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகே விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப் பட்டது.

சோகத்தில் மூழ்கிய இந்திய குடும்பங்கள்:

காணாமல்போன விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா சர்மா (51), மும்பையைச் சேர்ந்த சேத்னா கெல்கர் (55), வினோத் கெல்கர் (59), அவர்களது மகன் ஸ்வாந்த் கெல்கர் (23) மற்றும் பிரகலாத் ஆகியோர் பயணம் செய்தனர். இதில் சந்திரிகா சர்மா சென்னையில் உள்ள மீனவர்களுக்கான தொண்டு அமைப்பில் பணியாற்றி வந்தார்.

மங்கோலியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க அவர் கோலாலம்பூர் வழியாக பெய்ஜிங்கிற்கு விமானத்தில் சென்றார். விமானம் காணாமல்போன தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்துள்ளனர். சேத்னா கெல்கர், வினோத் கெல்கரின் மூத்த மகன் சன்வீத் கெல்கர் பெய்ஜிங்கில் பணியாற்றி வருகிறார்.

அவரைப் பார்ப்பதற்காக கெல்கரின் குடும்பம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளது. தாய், தந்தை, சகோதரரின் நிலை அறிய சன்வீத் கெல்கர், பெய்ஜிங் கட்டுப்பாட்டு அறையிலேயே முடங்கி கிடக்கிறார். இவர்கள் தவிர பிரகலாத் என்ற இந்தியரும் கனடா குடியுரிமை பெற்ற முகேஷ் முகர்ஜி என்பவரும் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x