Published : 03 Mar 2014 11:58 AM
Last Updated : 03 Mar 2014 11:58 AM

சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி உருவாக்கம்: 10 நாட்களுக்கு மின்னாற்றல் தரும்

சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் ஆகிக் கொள்ளும் பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த பேட்டரி 10 நாள்களுக்கு மின்னாற்றல் தரும் என்பது இதன் சிறப்பம்சம்.

தற்போது ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்களுக்கு லித்தியம்-அயன் வகை பேட்டரிகளே பயன் படுத்தப்படுகின்றன. இவ்வகை பேட்டரிகள் செயலிழந்த பிறகு உரிய முறையில் அப்புறப்படுத்தப்படாவிட்டால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை. மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருநாள் அல்லது அதிபட்சமாக 2 நாள்களுக்குத் தாங்கும்.

ஆனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து உழைக்கக் கூடிய அதுவும் சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் செய்துகொள்ளத்தக்க பேட்டரியை விர்ஜீனியா பாலிடெக்னிக் மற்றும் அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முழுக்க முழுக்க உயிரிப்பொருள்களால் இந்த பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் இதர பேட்டரி வகைகளை விட எடை குறைவானதும் திறன் மிக்கதுமாகும்.

இந்த பேட்டரியில் சர்க்கரையைச் சேர்க்கும் போது, அந்தச் சர்க்கரை மெல்ல கார்பன் டை ஆக்சைடு ஆகவும் நீராகவும் பிரிகிறது. இந்த வளர்சிதை மாற்றத்தின் போது வெளியாகும் எலக்ட்ரான்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து சேமித்துக் கொள்கிறது.

இது தொடர்பாக இந்த பேட்டரியைக் கண்டறிந்த ஆய்வாளர்களுள் ஒருவரான ஜிகுயாங் ஜு கூறுகையில்:

“லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தும்போது ஸ்மார்ட் போனில் ஒரு நாளுக்கு மட்டுமே அதன் எரிசக்தி நீடிக்கும். ஆனால், சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் இந்த புதிய பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாள்களுக்கு நீடிக்கும்” என்றார்.

இந்த பேட்டரியில் உள்ள 2 நொதிப் பான்கள் (என்சைம்கள்) சர்க்கரையிலுள்ள ஜோடி எலக்ட்ரான்களைப் பிரிக்க உதவு கின்றன. மற்ற 10 நொதிப்பான்கள் இதே செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய உதவுகின்றன. மீண்டும் இச் செயல் நடைபெறும்போது, அடுத்த இரு நொதிப்பான்கள் செயல்பட்டு எலக்ட்ரான் களைப் பிரிக்கின்றன.இதுபோன்று ஆறு சுழற்சிகளில் நொதிப்பான்கள் சர்க்கரை மூலக்கூறிலுள்ள அனைத்து சக்தியையும் எரிபொருளாக மாற்றி விடுகின்றன.

இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ‘நேச்சுரல் கம்யூனிகேசன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x