Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

வன உயிரின வேட்டைக்கு எதிராக பிரிட்டன் அரச வம்சம் போர்க்குரல்

சட்டவிரோதமான வனவிலங்கு வேட்டையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அவரது மகன் இளவரசர் வில்லியம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டன் அரசாங்கம் சார்பில் கடந்த வாரம் சட்டவிரோத வன விலங்கு உறுப்புகள் விற்பனை தொடர்பாக தொடர் விவாதக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் 50 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத வனவிலங்கு வேட்டை மற்றும் வனவிலங்கு உறுப்புகள் விற்பனை செய்வதற்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவில் இருவரும் பேசியுள்ளனர். அருக ருகே அமர்ந்துள்ள இருவரும், சட்டவிரோத வனவிலங்கு வேட்டைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.

அதில், “தந்தையும் மகனுமாக ஒருங்கிணைந்து வந்துள்ளோம். உலகில் வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப் பட்டு அவற்றின் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக இணைந்து போராடுவோம்“ என, 65 வயதான சார்லஸ் கூறியுள்ளார்.

ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் வில்லியம்(31), “மிக மோசமான சூழலை நாம் எதிர்கொண்டுள்ளோம். நாங்கள் இருவரும் நேர்மறையான சிந்தனையுடன் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்போம்” எனத் தொடங்கி பேசியுள்ளார்.

“யானை உள்பட அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகள் தினமும் 100 என்ற எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன. உலகின் பொக்கிஷமான வனவிலங்குகளின் வாழ்வுக்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைப்புத் தன்மைக்கும் வனவிலங்கு வேட்டையால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்ற தகவலை இரு இளவரசர்களும் வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.

வீடியோவின் இறுதியில் ‘வனவிலங்குகளுக்காக ஒன்றிணைவோம்’ என்பதை அரபி, வியட்நாமி, ஸ்வாஹிலி, ஸ்பானிஷ், மாண்டரின் உள்ளிட்ட மொழிகளில் அதாவது எங்கெல்லாம் அதிக அளவு வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றனவோ அந்த பிராந்திய மொழிகளில் இரு இளவரசர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கருத்தரங்கின் நிறைவில், “பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இப்பிரச்னை குறித்து விவாதிக்க இக்கருத்தரங்கு நல்வாய்ப்பாக அமைந்தது. மேலும், இப்பிரச்னையில் ஒருங்கிணைந்து செயல்படவும் அவர்கள் சம்மதித்துள்ளனர்” என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x