Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM
நீதிக்கும், சமத்துவத்துக்குமான போராட்டத்தை கடைசிவரை வன்முறையற்ற வழியில் மண்டலோ முன்னெடுத்துச் சென்றார் என்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நாட்டை வழிநடத்திச் சென்று தேசத்தந்தை என்று போற்றப்படுபவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள எஃப்.என்.பி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு சமய பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்து மத பிரார்த்தனையின்போது சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் வாசிக்கப்பட்டன.
லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் திடீரென மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் குடை பிடித்தபடி நிகழ்ச்சியில் கடைசி வரை பங்கேற்றனர். பின்னர், நிறவெறிக்கு எதிரான பாடல்கள் பாடப்பட்டன.
இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: “சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் நெல்சன் மண்டேலா. நீதியற்றத்தன்மைக்கும், சமத்துவமின்மைக்கும் எதிரான போராட்டத்தை கடைசிவரை வன்முறையற்ற வழியில் முன்னெடுத்துச் சென்றார்.
மண்டேலா தொலைநோக்குச் சிந்தனைமிக்கவர். அவர் விட்டுச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கைகளை உலகம் என்றென்றும் போற்றும் என்பதில் சந்தேகமில்லை.
நிறவெறியாலும் வன்முறையாலும் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த நாட்டில் மண்டேலா மேற்கொண்ட போராட்டம், இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது. அதனால்தான், அவருக்கு இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதை கொடுத்து கவுரவித்துள்ளோம்.
மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றியபோது, சமத்துவமின்மைக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார். பின்னர், அந்த போராட்டத்தைத்தான் இந்தியாவிலும் தொடர்ந்து நடத்தினார்.
இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில்தான், மண்டேலாவும் அதிபராக இருந்தபோது வெளியுறவுக் கொள்கையை வகுத்தார்” என்றார்.
கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், “நியாயத்தை நிலைநாட்டிய வரலாற்றின் நாயகராக திகழும் மண்டேலாவை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது. மகாத்மா காந்தியை போன்று போராட்டத்தை வழிநடத்தியவர் மண்டேலா. மார்ட்டின் லூதர் கிங்கை போன்று நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்து நியாயத்துக்காக மண்டேலா போராடினார்”என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் கடைசி அதிபர் எஃப்.டபிள்யூ. டி கிளார்க், சீன துணை அதிபர் லீ யுவான்சாவோ, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஹொலந்த், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்டர், ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதிச் சடங்கு
கடந்த வாரம் வியாழக்கிழமை காலமான நெல்சன் மண்டேலாவின் உடல், உலகத் தலைவர்கள், பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு டிசம்பர் 15-ம் தேதி மண்டேலாவின் சொந்த கிராமமான கியூனுவில் நடைபெறவுள்ளது.
கவனத்தை ஈர்த்த ‘கைகுலுக்கல்’
அமெரிக்காவும் கியூபாவும் அருகில் இருந்தாலும், பல ஆண்டுகாலமாக இருநாடுகளுக்கிடையே பனிப்போர் நிலவுகிறது. முக்கியமாக கியூபா புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் தலைவரான பிடல் காஸ்ட்ரோ அதிபரான இரண்டாவது ஆண்டில் (1961) இருநாடுகளும் தங்களுக்கு இடையிலான ராஜாங்க உறவுகளை முறித்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மேடை ஏறி பேசுவதற்கு முன்பாக ஒபாமா தாமாகவே முன்வந்து கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கினார். சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்தவகையிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT