Published : 17 Mar 2014 12:04 PM
Last Updated : 17 Mar 2014 12:04 PM

பிரிட்டன் தொழிலாளர்களின் நாயகன் டோனி பென்

பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவரும் சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் முன்னாள் அமைச்சருமான டோனி பென், லண்டனில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 88.

25 வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு 50 ஆண்டுக்கால நாடாளுமன்ற அனுபவம் உண்டு. ஹரால்டு வில்சன், ஜேம்ஸ் கல்லகன் ஆகியோருடைய அமைச்சரவைகளில் தொழில்நுட்பத்துறை, தொழில்துறை, விசைத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் சேரக்கூடாது என்று கடுமையாக வாதிட்டவர் அவர். ஹரால்டு வில்சனின் அமைச்சரவையில் சிறப்பாகச் செயல்பட்டார். 1970-களில் இடதுசாரி கருத்துகளை அதிகம் ஏற்றார். தொழிலாளர் கட்சித் தலைவர் பதவிக்கு டெனிஸ் ஹீலியை எதிர்த்துப் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். 1983 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவதை அமைப்புரீதியாகவே கட்சியில் கட்டாயமாக்கினார். இதனால், தொகுதி வளர்ச்சிக்காக எந்த உறுப்பினர் நன்றாக பாடுபட்டாரோ அவர் தானாகவே மீண்டும் வேட்பாளராகும் தகுதியைப் பெற்றார்.

இதை அப்போது பலர் விரும்ப வில்லை. ஆனால் இன்றைக்கு இதுதான் சர்ச்சைக்கு இடம்தராத, வேட்பாளர் தேர்வுக்கு அடிப்படை யாகக் கொள்ளப் படுகிறது. மைக்கேல் ஃபூட்டின் அரசியல் தோல்விக்குப் பிறகு, நீல் கின்னாக் என்பவர் தொழிலாளர் கட்சியின் தலைவரானார். அப்போது கட்சி, 'இடதுசாரி' கொள்கைகளின் சார்பிலிருந்து 'நடுநிலை'க் கொள்கை சார்பு நிலையை மேற்கொண்டது.

எனவே டோனி பென்னுக்கு கட்சியில் செல்வாக்கு குறை யத் தொடங்கியது. 1988-ல் கட்சித் தலைவர் பதவிக்கு நீல் கின்னாக்குக்கு எதிராகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். 2001-ல் நாடாளுமன்றத்திலி ருந்தே விடை பெற்றார். ஆயினும் அவருடைய அரசியல் சிந்தனை களுக்காகவும், பேச்சாற்ற லுக்காகவும் இலக்கியக் கூட்டங் களிலும் அரசியல் கூட்டங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

இராக் மீது படையெடுப்பதை எதிர்த்தார்

2003-ல், “போரை நிறுத்துங்கள்” என்ற இயக்கத்தின்போது இராக்கில் மேற்கத்திய நாடுகள் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தி அவர் பேசிய கூட்டங்களுக்குப் பெரும் திரளமாக மக்கள் வந்தனர்.

2012-ல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு பெரும்பாலும் மருத்துவ மனையிலேயே இருந்தார். பிறகு லண்டனில் அவருடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே அடுக்க கம் ஒன்றில் குடியேறினார். அவரு டைய பிள்ளைகள் அவரை வாரம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். பெரும்பாலும் தனிமையிலேயே கழித்த அவர், மனைவியின் நினைவுகளையே தனக்குத் துணையாகக் கொண் டார்.

டோனி பென், அமெரிக்காவிலிருந்து வந்த கரோலினை 1948 ஆகஸ்ட் 2-ம் தேதி சந்தித்தார். அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட பென், 9 நாள்கள் கழித்து அவருடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அரை வினாடி மட்டுமே யோசித்த கரோலின் அவரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். அப்போது ஆக்ஸ் போர்டின் புல்வெளியில் ஒரு பெஞ்சில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

மனைவி இறந்த பிறகு அந்த பெஞ்சை ஒரு தேவாலயத்திலிருந்து விலைகொடுத்து வாங்கிவந்து வீட்டில் பாதுகாத்தார். அவருடைய மனைவியைப் புற்றுநோய் தாக்கியது. கனிவும் துணிவும் கொண்ட அவருடைய மனைவி கரோலின் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் குடும்பத்தினரிடம் அன்பு காட்டினார்.

தன்னுடைய பொதுவாழ்வுக்கு மனைவி தந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் அவரால் மறக்க முடியவில்லை. கடைசியாக நோய் முற்றியதும் மருத்துவமனையில் சேர்த்தார்.

இறுதிக்கட்டம் நெருங்கிய போது படுக்கையைச் சுற்றிலும் மகன்களும் மகளும் நிற்க, டோனி பென் சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது நர்ஸ்களில் ஒருவர் அவரிடம் வந்து, “நீ போவதாக இருந்தால் இப்போது போகலாம் என்று உங்கள் மனைவியிடம் எல்லோருமாகச் சேர்ந்து சொல்லுங்கள்” என்றார். பென்னும் அவருடைய மகன்கள், மகளும் அவ்விதமே மனைவியின் காதருகில் சொன்னார்கள். அடுத்த நிமிடமே அவருடைய மூச்சு அடங்கி உயிர் பிரிந்தது. அந்தக் காட்சியை மறக்க முடியாத டோனி பென், தனக்கும் அத்தகைய அமைதியான முடிவே ஏற்பட வேண்டும் என்று 'டெய்லி மிரர்' பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மனைவியின் கல்லறையிலேயே ஒரு பகுதியைத் தனக்காக ஒதுக்கி வைத்திருந்தார். “இறந்த பிறகு மனைவியைச் சந்திக்க முடியுமா, சேர முடியுமா என்று தெரியாது, ஆனால் அப்படியொரு விருப்பம் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் நேசித்ததைப் போலவே ஏழைகளையும் நேசித்தார். அரசின் எந்த திட்டமும் கொள்கையும் ஏழைகளின் நலனுக்காகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார். போர் இல்லாத சமுதாயம் வேண்டும் என்று விரும்பினார். பிற நாடுகளின் விவகாரங்களில் ராணுவ ரீதியாகத் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.

டோனி பென்னின் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமல் லாது மற்ற கட்சித் தலைவர் களும் அவருக்குப் புகழாரம் சூட்டியிருக்கின்றனர். பிரிட்டனின் மூத்த அரசியல் தலைவர் மக்களிட மிருந்து பிரியா விடைபெற்று விட்டார். அவருக்கு ஸ்டீபன், ஹிலாரி, ஜோஷுவா என்ற மகன்களும் மெலிசா என்ற மகளும் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x