Published : 30 Sep 2013 08:50 AM Last Updated : 30 Sep 2013 08:50 AM
மாகாணங்களுக்கு நிலம், போலீஸ் அதிகாரம் இல்லை: இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணம் உட்பட அனைத்து மாகாண சபைகளுக்கும் நில நிர்வாகம், போலீஸ் அதிகாரம் கிடையாது என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்தது.
இப்போது தரப்பட்டுள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டே மாகாண சபைகள் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் செய்தித்துறை அமைச்சரும் அரசு செய்தித் தொடர்பாளருமான கெஹலிய ரம்புகவெல்லா இது பற்றி கூறியதாவது: தற்போது அமலில் உள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டே மாகாண சபைகள் செயல்படவேண்டும். வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்க உள்ளவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் இதை அறியாதவர் அல்ல என்றார் ரம்புகவெல்லா.
மாகாண சபையின் எதிர்கால செயல்பாடு பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்திய நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிலம் மீதான அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால் நிலம் மீதான அதிகாரம் மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அர்த்தம் இல்லை. நிலம் மீதான அதிகாரம் மாகாண அரசுகளுக்கு உள்ளது என கொழும்பில் உள்ள அப்பீல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதை மீறி நில அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க முடியாது என்றார் ரம்புகவெல்லா.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த வடக்கு மாகாணத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த வாரம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 36 இடங்களில் 30-ஐ கைப்பற்றி ஆட்சியை பிடித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. 1987-ல் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசை நிர்பந்திப்போம் என்று வாக்காளர்களை அணுகி பிரசாரம் செய்தது தமிழ் தேசிய கூட்டணி.
மாகாண அரசுகளுக்கு வரம்பற்ற அதிகாரம் கொடுத்தால் அது இலங்கைத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கை நனவாக வழி செய்யும் என்று அதிபர் ராஜபட்சவின் தேசியவாத கூட்டணி கட்சிகள் எதிர்க்கின்றன.
WRITE A COMMENT