Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM
உக்ரேனிய மக்கள் புரட்சி அதன் உச்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏழைமை ஆற்றவும் பட்டோம், இனி என்றும் உன்னை ஆளவிடமாட்டோம் என்று லட்சக்கணக்கான ஜனங்கள் அதிபருக்கு எதிராக வீதிக்குத் திரண்டுவிட்டார்கள். இதற்கு முன்னால் அதிபர்களாக இருந்த பழைய நல்லவர்கள் இரண்டு மூன்று பேரைத் தேடிப் பிடித்து வந்து உட்காரவைத்து ஆலோசனை கேட்டு, புரட்சியை அடுத்தக் கட்டம் நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பக்கம் எதிர்க்கட்சிகளின் இடைவிடாத போர்க்குரல். மறுபக்கம் மக்களின் மகத்தான பெரும் எழுச்சி. அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. என்னவோ ஒரு தப்பு நடந்திருக்கிறது. அநேகமாக அது அவர் செய்ததாகத்தான் இருக்கும். ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக சகாயம் செய்துகொள்ள இருந்த வாய்ப்பு வாசலை இழுத்து மூடி சீல் வைக்க எடுத்த முடிவு, குடிமகா ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. ரஷ்யாவுக்கு வால் பிடிக்காதே. புதினுக்கு மதிப்புக் கொடுக்காதே. இது உன் வாழ்க்கை அல்லது நம் வாழ்க்கை. நமக்கு எது நல்லதென்று நாம் முடிவு செய்வோம். அவன் யார் உன்னை வழி நடத்த?
இந்தக் கோபம் இத்தனை பெரும் புரட்சியாகும் என்று அதிபர் எண்ணிப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எண்ணியிருந்தால் இப்போது சகாயம் பேசலாம், சமாதானமாகப் போகலாம் என்று கண்ணீர் மல்கக் கேட்டுப் பார்ப்பதையெல்லாம் அப்போதே செய்து முடித்திருப்பார்.
உக்ரேனியர்கள் கேட்பதென்ன? ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உறவு கொள்ளுங்கள். அரசியல் நல்லுறவுக்கு அடித்தளமிடுங்கள். அதன்மூலம் உக்ரேனியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம் சித்திக்கும். தேசமும் வளரும், மக்களும் வளர்வார்கள்.
அதிபர் செய்ததென்ன? இருபத்தியெட்டு தேசங்களை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் நடத்திய ஒரு மாபெரும் வர்த்தக ஒப்பந்தத் திருவிழாவைப் புறக்கணித்துவிட்டார். அதில் அவர் கையெழுத்துப் போட்டு, சேராததன் ஒரே காரணம் ரஷ்ய அதிபர் புதின் அதனை ஆதரிக்கவில்லை என்பதுதான்.
ரஷ்யா எக்கேடு கெடட்டும், நாசமாய்ப் போகட்டும், உனக்கெங்கே போச்சு புத்தி என்று இப்போது மக்கள் கேட்கிறார்கள். நீ யார் அதைக் கேட்பதற்கு என்று அதிபர் காட்டிய தெனாவட்டுக்கு பதில், இந்த மக்கள் புரட்சி.
தாங்கமுடியாமல் அதிபர் இப்போது சமரசத்துக்கான சாத்தியங்களை ஆலோ சித்துக்கொண்டிருக்கிறார். உக்ரேனில் இப்போது கடும் பனிக்காலம் தொடங்குகிறது. இரண்டு மூன்று தினங்களாகவே வீதியில் இறங்கமுடியாத அளவுக்குப் பனிப்புயலும் கடுங்குளிரும் வீசுகிறது. மரங்கள், வீடுகள், சாலை அனைத்தும் பனிக்கட்டி ஆடை உடுத்தத் தொடங்கிவிட்டன. போக்குவரத்து சர்வநாசமாகிக்கொண்டிருக்கும் சூழ்நிலை. மைனஸ் பத்து டிகிரியைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது சீதோஷணம்.
புரட்சிக்காரர்களை ராணுவத்தால் அடக்க முடியாவிட்டாலும் இந்தப் பேய்க்குளிர் வீட்டுக்குள் முடக்கிப் போடும் என்பதே அதிபரின் எதிர்பார்ப்பு. ஆனால், விட்டேனா பார் என்று இந்த குளிரிலும் தினசரி ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் ஊர்வலம் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதனால்தான் எதிர்க்கட்சிகளை சமரசம் பேச அழைத்திருக்கிறார் அதிபர் பெருமான்.
என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. அது இரு தரப்புக்கும் நியாயமான சில தீர்வுகளை அளிக்கக்கூடியது. நாம் உட்கார்ந்து பேசலாமே?
பேசலாம்தான். எங்கே உட்கார்ந்து பேசுவது? என்றைக்குப் பேசுவது? இரு தரப்பிலும் யார் யார் பேசலாம்? ஒரு குறிப்பும் கிடையாது. ஒரே வரி. பேசலாம், வாருங்கள்.
மக்கள் அதிபரின் மீது முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பது மட்டும் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. இப்போது தொடங்கியிருக்கும் கடுங்குளிர் காலம் முடியும்வரை புரட்சியை ஒத்திப்போடுவார்கள் என்று அதிபர்தான் இலவு காத்துக்கொண்டிருக்கிறாரே தவிர, மக்கள் குளிரை ஒரு பொருட்டாக நினைப்பதாகவே தெரியவில்லை.
இந்தக் குளிர் நாங்கள் பிறந்தது முதல் அனுபவித்துக்கொண்டிருப்பது. இது எங்களைக் கொல்லாது. எங்களைக் குளிருக்கும், குளிரை எங்களுக்கும் நன்றாகவே தெரியும். எங்களைப் புரிந்துகொள்ளாமல், எங்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காமல் சீண்டி விளையாடியிருப்பது அதிபர்தான். அந்தாளை முதலில் பதவி விலகச் சொல்லுங்கள்; என்ன பேசுவதென்றாலும், யாருடன் பேசுவதென்றாலும் அதற்கப்புறம் பார்க்கலாம் என்கிறார்கள் உக்ரேனியர்கள்.
வெல்லும்வரை ஓயாது போலிருக்கிறது இந்த உக்கிர-ரேனியத் தாண்டவம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT