Published : 03 Mar 2014 12:05 PM
Last Updated : 03 Mar 2014 12:05 PM

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: நீதிபதி உள்பட 11 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் திங்கள்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நீதிபதி உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்லாமாபாதில் எப்-8 பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காலை பல்வேறு வழக்குகளின் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது நீதிமன்ற வளாகத்தில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர்.

சரமாரியாக கையெறி குண்டுகளை வீசிய அவர்கள், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரபாகட் அகமது கான் அவானின் அறைக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். பின்னர் நாலாபுறமும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 15 நிமிடங்கள் கோரத்தாண்டவமாடிய அவர்கள் இறுதியில் தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சதை பிண்டங்களாக சிதறினர்.

உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்

இந்தத் தாக்குதலில் நீதிபதி உள்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்த வர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் பாகிஸ்தானின் சிறப்பு கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்கொலைப் படை தீவிரவாதிகளின் சிதறிய உடல் பாகங்களை சேகரித்த அவர்கள் டி.என்.ஏ. ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட எப்-8 நீதிமன்ற வளாகம் உயர் பாதுகாப்பு வளையப் பகுதி ஆகும். அங்கு தற்கொலைப் படை தீவிரவாதிகள் சர்வசாதாரணமாகப் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தானாக வழக்குப் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், உரிய விளக்கம் அளிக்கும்படி உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக உள்துறைச் செயலர், இஸ்லாமாபாத் போலீஸ் கமிஷனர், காவல் துறைத் தலைவர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், உயர் நிலை விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். இதனி டையே பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x