Published : 30 Dec 2013 12:30 PM
Last Updated : 30 Dec 2013 12:30 PM

கொலராடோவில் கஞ்சா விற்க அனுமதி: அமெரிக்காவில் முதல் முறை

அமெரிக்காவில் முதல் முறையாக கொலராடோ மாகாணத்தில் கஞ்சா விற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தலைநகர் டென்வர் உள்பட அந்த மாகாணம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் கஞ்சா விற்பனை தொடங்கப்பட உள்ளது. கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு தனி உரிமமும் விற்பனை செய்வதற்கு தனி உரிமமும் வழங்கப்படுகின்றன. இரு பிரிவுக்கும் சேர்த்து இதுவரை 42 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 160-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2012 நவம்பரில் கொலராடோ மாகாணத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக அங்கீகரிக்க 65 சதவீத வாக்காளர்கள் ஆதரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இப்போது கஞ்சா விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதன் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

21 வயதுக்கு மேற்பட் டவர்களுக்கு மட்டுமே கஞ்சாவை விற்பனை செய்ய வேண்டும். ஒரு நபருக்கு ஒரு அவுன்ஸ் (28 கிராம்) அளவுக்கு மட்டுமே வழங்க வேண்டும். கஞ்சா வாங்கும் நபர் கண்டிப்பாக தனது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வெளி மாகாண நபர்களுக்கு 8 கிராம் அளவுக்கு மட்டுமே விற்க வேண்டும். கடையிலோ, பொது இடத்திலோ கஞ்சாவை புகைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாகனச் சோதனையின்போது வாகன ஓட்டியின் ரத்தத்தில் 5 நானோகிராமுக்கு மேல் கஞ்சா அளவு இருந்தால் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x