Last Updated : 03 Jan, 2014 01:30 PM

 

Published : 03 Jan 2014 01:30 PM
Last Updated : 03 Jan 2014 01:30 PM

சாந்தி நிலவ வேண்டும்!

ஏதாவது ஒரு நல்ல காரியத்துடன் புத்தாண்டு பிறக்கும்போதுதான் எத்தனை ஆறுதலாக இருக்கிறது. ஆனால் ஆரம்ப ஜோருடன் கடையைக் கட்டிவிட்டு யாரும் மீண்டும் முறைத்துக்கொண்டு போய்விடக்கூடாது.

நேற்றைக்கு, தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகள் பக்கத்து தேசமான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு அஃபிஷியலாக அமைதிப் பேச்சு பேச வந்து சேர்ந்தார்கள். தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ரின் அமைதிப் படையும் அடுத்த முகூர்த்தத்தில் கிளம்பி வந்துவிடும். எப்போது போர் நிற்கும் என்றெல்லாம் யாரும் இன்னும் மூச்சு விடவில்லை. இந்தப் பக்கம் பேச்சுவார்த்தை பிரகஸ்பதிகள் விமானமேறியபோதே அங்கே தெற்கு சூடானில் தலைநகருக்குப் பத்து கிலோ மீட்டர் தொலைவிலேயே கடும் யுத்தம் நடந்துகொண்டுதான் இருந்தது.

உண்மையில் அமெரிக்க அச்சுறுத்தலும் ஐநாவின் இடைவிடாத நச்சரிப்பும் இல்லாதிருந்தால் இந்தப் பேச்சு வார்த்தை கூட சாத்தியமாகியிருக்காது. ஆப்பிரிக்கக் கண்டத்தி லேயே தெற்கு சூடான் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் தேசம். இந்த எண்ணெய் வளம் முழுக்கத் தங்களுக்கு உதவாமல் எங்கோ போய்க் கொழிக்கிறதே என்ற கடுப்பில்தான் போராடி 2011ம் ஆண்டு சூடானில் இருந்து தெற்கு பிரிந்தது.

பிரிந்தபின் மனமே பிரச்னை பண்ணாதே என்று யார், யாருக்குச் சொல்வது? அதிபர் சல்வா கிர் தமது துணை அதிபராகத் தாமே சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியமாக ரீக் மேச்சர் இருந்தார். ஒருநாளும் ஒத்துப்போகாத துணை. எனவே அதிபரானவர் ஒரு சுப முகூர்த்த தினத்தில் அவரைப் பதவி நீக்கம் செய்து அனுப்ப, மேச்சர், பல்வேறு ஆதிவாசி இனக்குழுக்களைத் திரட்டி அரசுக்கு எதிராக யுத்தம் புரியத் தொடங்கிவிட்டார்.

கடந்த இருபது தினங்களாக தெற்கு சூடான் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. எங்கே எண்ணெய்க் கிணறுகளுக்கு வேட்டு வைத்து விடுவார்களோ என்று அஞ்சாத நெஞ்சங்களே இல்லை. நல்ல வேளை, அதெல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இன்றைக்கு அமைதிப் பேச்சு என்று ஒரு படி முன்னேறி வந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு என்ன கடுப்பென் றால் தெற்கு சூடான் என்னும் தேசம் உதயமாவதற்கு அது நிறைய மெனக்கெட் டிருக்கிறது. தேசம் பிறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் ஆட்சியில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை. ஒழுங்கில்லை, ஒழுக்கமில்லை, உருப்படியாக ஒன்றும் செய்ய வில்லை; அதற்குள் உள்நாட்டு யுத்தமென்றால் உனக்கெதற்கு நான் உதவவேண்டும்? என் சகாயத்தை நிறுத்திவிடுவேன் என்று பாரக் ஒபாமா சல்வா கிர்ருக்கு பூச்சாண்டி காட்டியதன் விளைவு, அதிபர் தமது முன்னாள் துணை அதிபரும் இன்னாள் ஜென்ம சத்ருவுமான மேச்சருடன் பேச்சு வார்த்தைக்குத் தயாரென்று சொன்னார். ஆனால் எத்தியோப்பியாவுக்குப் போய் இறங்கியதுமே கிளர்ச்சியா ளர் குழுவின் பிரதிநிதிகள் அதிபரைக் குறித்துக் கண்டபடி கெட்ட பேர் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அமைதிப் பேச்சுக்கு வந்த இடத்தில் இந்த துஷ்டப் பிரசாரங்களெல் லாம் கூடாது என்று பெரியவர்கள் எடுத்துச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள். காலக்கிரமத்தில் பேசத் தொடங்கி என்னவாவது ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் தேவலை என்று காத்திருக்கிறார்கள் தெற்கு சூடானியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x