Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM
சதாம் ஒரு குற்றவாளி; உண்மை தான், ஒரு கொலைகாரர்;உண்மை தான், படுகொலை புரிந்தவர்; உண்மைதான். ஆனால், அவர் தன் இறுதி நிமிடம் வரை துணிச்சல் காட்டினார். ஒரு போதும் வருத்தப்படவில்லை, வருத்தம் தெரிவிக்கவுமில்லை.
ஈராக் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் சதாம் ஹுசேன் தூக்கி லிடப்பட்டதை அருகிலிருந்து பார்த்தவரான மொவாபக் அல் ருபேய், சதாமின் இறுதி நிமிடங்கள் குறித்த நினைவைப் பகிர்ந்து கொண்டபோது சொன்னவைதான் மேற்சொன்ன வாக்கியங்கள்.
மொவாபக் அல் ருபேய் இராக்கின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். கடந்த 2006 ஆம் ஆண்டு சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்டபோது அருகில் இருந்த ஒரே நபர். சதாம் தூக்கிலிடப்பட்ட வடக்கு பாக்தாத் நகரின் காதிமியா பகுதியில் உள்ள சிறைக்கு அருகே மொவாபாக்கின் அலுவலகம் இருக்கிறது.
அங்கு சதாம் ஹுசேன் தன் பிரத்யேக ராணுவ உடையில் கம்பீரமான பார்வையுடன் காணப் படும் மார்பளவுச் சிலை வைக்கப்பட்டிருக் கிறது. அச்சிலையின் கழுத்தைச் சுற்றி, சதாமைத் தூக்கிலிடப் பயன் படுத்தப்பட்ட உண்மையான கயிறு சுற்றப்பட்டுள்ளது. அதனைப் பார்த்த படி சதாமின் இறுதி நிமிடங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
“சிறைக் கதவு வழியாக சதாம் உள்ளே நுழைந்தார். அவரை எதிர்கொண்டு அழைத்தேன். எங்களுடன் அமெரிக்கரோ வேறு வெளி நாட்டவரோ வேறு யாரும் இல்லை. அவர் வெள்ளை நிறச் சட்டையும் மேலங்கியும் அணிந்திருந்தார். நிதானமாகவும் மிக இயல்பாகவும் இருந்தார். அவரிடம் பயத்துக்கான அறிகுறி சிறிதும் இல்லை.
அவர் மிகக் குழப்பமான மன நிலையில் இருந்தார் அல்லது அவருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருந்தது என்று நான் சொல்ல வேண்டும் என சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நான் சொல்வதுதான் வரலாற்றுச் சம்பவம். அவரிடம் எவ்வித வருத்தத்தை யும் பார்க்க முடியவில்லை; வருத்தம் தெரிவிக்கவுமில்லை. கருணை காட்டும்படி கடவுளிடம் அவர் கோரிக்கை விடுக்கவில்லை; கடவுளிடம் மன்னிப்பும் கோர வில்லை. இறக்கும் தருவாயில் உள்ள மனிதர்கள் வழக்கமாக, “கடவுளே என் பாவங்களை மன்னி்ப்பீராக, நான் உம்மிடத்திலே வருகிறேன்” என்று சொல்வார்கள். ஆனால் இதுபோன்ற எதையும் அவர் கூறவில்லை.
அவரை நான் நீதிபதியின் முன் அழைத்துச் சென்றேன். அவருக்கு கைவிலங்கு இடப்பட்டிருந்தது. சதாம் குர்ஆன் வைத்து இருந்தார். நீதிபதி குற்றப்பத்திரிகையை வாசித் தார். “அமெரிக்காவும், இஸ்ரேலும் அழிந்து போகட்டும், பெர்ஸியன் மேகிக்கு (ஜூராஸ்ட்ரியனிசம்) மரணம் சம்பவிக்கட்டும். பாலஸ் தீனம் நீடூழி வாழட்டும்! என்றார்.
பேசுவதை நிறுத்திய அவர், தூக்குமேடையைப் பார்த்தார். பின் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டுச் சொன்னார்: ‘டாக்டர், இது மனிதர்களுக்கானது’ என்று.
அவரை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்தது. அப்போதும் அவரின் கால்கள் மிக உறுதி யாக நிலைபெற்றிருந்தன. ஆகவே, நானும் வேறு சிலரும் தூக்குமேடையின் படிக்கட்டுகளை நோக்கி அவரை இழுத்துச் சென்றோம். இராக்கின் வலிமையான ராணுவ ஆட்சியாளரான சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்ட அறையை அடிக்கடி பார்த்தபடி, அவரின் இறுதி நிமிடங்கள் குறித்து மொவாபாக் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இராக்கின் அதிபராக 1979ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சதாம் ஹுசேன், சுமார் 24 ஆண்டுகள் அதாவது அமெரிக்கா தலைமை யிலான ராணுவப் படைகள் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில், பண்ணைவீட்டின் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாமைக் கண்ட றியும் வரை அதிபராக நீடித்தார்.
மூன்று ஆண்டுகள் விசாரணைக் குப் பிறகு 2006 டிசம்பர் 30 ஆம் தேதி சதாம் தூக்கிலிடப்பட்டார். தான் அதிகாரத்தில் இருந்தவரை அமெரிக்காவுடனும், இஸ்ரேலுட னும் சதாம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். 1982 ஆம் ஆண்டில் துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முஸ்லிம்களை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சதாம் தூக்கி லிடப்பட்டார். இராக்கில் உள்நாட்டு ஸ்திரமற்ற தன்மையின்போது ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT