Published : 28 Oct 2013 10:14 AM Last Updated : 28 Oct 2013 10:14 AM
ஜெர்மனி பிரதமரை உளவு பார்த்தது ஒபாமாவுக்கு தெரியும்: 10 ஆண்டுகளாக செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்பு
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போன் உரையாடல்கள் சுமார் 10 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இந்த ரகசியம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் தெரியும் என்று ஜெர்மனி நாளிதழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 35 தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை அமெரிக்காவின் உளவுப் பிரிவான தேசிய புலனாய்வு அமைப்பு (என்.எஸ்.ஏ.) ஒட்டுக் கேட்டுள்ளது. இதில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போன் உரையாடல்களை 2002-ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்.எஸ்.ஏ. உளவு பார்த்து வருகிறது.
இந்த ரகசியத்தை என்.எஸ்.ஏ.வின் தலைவர் கெயித் அலெக்சாண்டர், அதிபர் ஒபாமாவிடம் முன்னரே விவரித்துள்ளார். அப்போது ஒபாமா அதை தடுத்து நிறுத்தவில்லை, மாறாக தொடர்ந்து ஒட்டுக் கேட்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏஞ்சலா மெர்கலிடமிருந்து ஒட்டுக் கேட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரிக்குமாறும் வெள்ளை மாளிகை உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு அதிபர் ஒபாமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஏஞ்சல் மெர்கல் தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அப்போது எதுவும் தெரியாத அப்பாவிபோல் பேசிய ஒபாமா, இந்த விவரம் தனக்குத் தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்பேன் என்று நீலிக் கண்ணீர் வடித்துள்ளார். ஆனால் எல்லாமே அவருக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என்று பைல்ட் அம் சோன்டேக் என்ற நாளிதழ் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. 2002-ல் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கும் ஏஞ்சலா மெர்கலுக்கும் சுமுகமான உறவு கிடையாது. அப்போதுமுதலே மெர்கலின் செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதை என்.எஸ்.ஏ. தொடங்கியது. மிக அண்மைக்காலம் வரை இந்த ஒட்டுக் கேட்பு தொடர்ந்துள்ளது.
மெர்கலுக்கும் ஒபாமாவுக்கும் இடையேகூட சுமுக உறவு இல்லை. யூரோவின் மதிப்பை உயர்த்த ஜெர்மனி மேற்கொண்ட நடவடிக்கைகள், இராக் போரின்போது படைகளை அனுப்ப மறுத்தது, லிபியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளிடையே கசப்புணர்வு அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக மெர்கல் மட்டுமல்லாமல், ஜெர்மனி அரசின் அனைத்து அசைவுகளையும் அங்குலம் அங்குலமாக அமெரிக்கா உளவு பார்த்திருக்கிறது. இதற்காக பெர்லினில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 18 பேர் கொண்ட சிறப்பு உளவுக் குழு செயல்பட்டிருக்கிறது.
இப்போதைய நிலவரப்படி அமெரிக்காவின் உளவுப் பிரிவுகளான சி.ஐ.ஏ.வுக்கும் என்.எஸ்.ஏ.வுக்கும் உலகம் முழுவதும் சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய மையங்கள் உள்ளன. ஐரோப்பாவில் பாரீஸ், ரோம், மான்ரிட், ஜெனீவா உள்ளிட்ட 19 நகரங்களில் ரகசிய மையங்கள் செயல்படுகின்றன என்று அந்த நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
WRITE A COMMENT