Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

ஐ.நா. பணிக்கு மாற்றப்பட்டாலும் வழக்கு நடவடிக்கை தொடரும் - அமெரிக்கா திட்டவட்டம்

பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானியை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரகப் பணிக்கு மாற்றியிருக்கும் நடவடிக்கை அவருக்கு சட்டப் பாதுகாப்பை அளிக்காது.

அவர் மீதான புகார் தொடர்பாக வழக்கு நடவடிக்கைகளை வாபஸ் பெறப் போவதில்லை. விசாரணை தொட ரும் என்று அமெரிக்க அரசு மீண்டும் கூறி யுள்ளது.

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே மீது விசா மோசடி வழக்கை பதிவு செய்த போலீஸார், அவரை பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தனர். அவரின் ஆடையை களைந்து சோதனையிட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும், தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அதற்கு அமெரிக்க அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இது தொடர்பாக அமெரிக்க வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது: “ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தேவயானி இப்போதுதான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பதவிக்கான சட்டப் பாதுகாப்பு, அவர் அப்பதவியில் பொறுப்பேற்ற பிறகுதான் கிடைக்கும். எனவே, அவரது முந்தைய செயல்பாடுகளின் பேரில் தொடரப்பட்ட வழக்கிற்கும், இதற்கும் சம்பந்தமில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

தேவயானி புதிய பதவியில் நியமிக் கப்பட்டதற்கான அங்கீகாரத்தை இந்தியா கோருவது தொடர்பாக அதிகார பூர்வமான தகவல் ஏதும் எங்களுக்கு வர வில்லை. அந்த கோரிக்கை கிடைக்கப் பெற்று, அங்கீகாரம் அளிக்கப்பட்ட பின்பு, அவர் வகிக்கப் போகும் பதவிக்கான சட்டப் பாதுகாப்பு இனிவரும் காலங்களில் கிடைக்கும்.

குர்ஷித்துடன் விரைவில் பேச்சு

இந்திய – அமெரிக்க உறவின் முக்கி யத்துவம் பற்றியும், அதன் மதிப்பு குறித்தும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ள கருத்து அனைத்தையும் ஆமோதிக்கிறோம். இது, இரு நாடுகளுக்கும் இடையே யான தூதரக உறவு குறித்து மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இரு நாடுகளுக்கும் இடையே 9 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. தேவயானி விவகாரத்தில் தூதரக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். சல்மான் குர்ஷித்துடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் ஜான் கெர்ரியிடம் உட னுக்குடன் தெரியப்படுத்தி வருகிறோம்.

தலையிட மாட்டோம்

சட்டரீதியான இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையும், இந்தியாவும் வெவ்வேறு கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. தேவயானி மீதான விசா மோசடி வழக்கை தொடர்ந்தது அமெரிக்க வெளியுறவுத் துறையின் பாதுகாப்புப் பிரிவு, அது இப்போது சட்டத் துறை சார்ந்த விவகாரமாக மாறிவிட்டது. இதில் வெளியுறவுத் துறை இனிமேல் தலையிட முடியாது. எனவே, சட்டம் மற்றும் நீதித்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி எங்களுக்கு முழுமையாக எதுவும் தெரியாது.

அதே சமயம், இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியம் என்பதால், அந்நாட்டுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.- பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x