Published : 26 Oct 2013 11:20 AM Last Updated : 26 Oct 2013 11:20 AM
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு போலீஸ் பணி: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
இலங்கையில் தமிழர்கள் அதிகமுள்ள வடக்கு மாகாணத்தில் காவல்துறை பணியில் தமிழர்களை நியமிக்க வேண்டுமென்று அம்மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண கவுன்சில் முதல் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். அவர் மேலும் கூறியது:
வடக்கு மாகாணத்தில் இப்போது காவல் பணியில் உள்ளவர்களுக்கு தமிழ் மொழி தெரியவில்லை. இங்குள்ள கலாசாரமும் அவர்களுக்குத் தெரியாது. எனவே இது நீண்டகாலம் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியதாக மாறும். 13-வது சட்டத் திருத்த த்தின்படி போலீஸாருக்கு எந்தவகையான அதிகார ங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது, அவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் ஆதிக்கத்தின்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன் என்று விக்னேஸ்வரன் பேசினார்.
1990-ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற போது அங்கிருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை குறைத்துக் கொள்வது குறித்துப் பேசிய விக்னேஸ்வரன், இது தொடர்பாக கொழும்பில் உள்ள அரசுடன் பேசுவேன் என்றார்.
இலங்கையில் 2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட பின்பு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ல் நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்றது. விக்னேஸ்வரன் முதல்வரானார்.
WRITE A COMMENT