Published : 01 Oct 2013 07:16 PM
Last Updated : 01 Oct 2013 07:16 PM

மன்மோகனை கிராமத்துப் பெண் என ஒருபோதும் அழைக்கவில்லை: ஷெரீப்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை 'கிராமத்துப் பெண்' என்று தாம் ஒருபோதும் அழைக்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம், கடந்த சில நாட்களாக நீடித்துவந்த சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணைபோகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு உதவிவருவதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் இந்த அணுகுமுறை குறித்து நவாஸ் ஷெரீப் தன்னிடம் பேசியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஹமித் மிர் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், கிராமத்துப் பெண்ணைப் போல மன்மோகன் சிங் நடந்துகொள்வதாக, நவாஸ் ஷெரீப் கூறியதாகக் குறிப்பிடிருந்தார்.

இந்த விவகாரம், ட்விட்டரில் இணையவாசிகளால் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால், சர்ச்சை வலுக்க ஆரம்பித்தது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, இந்திய நாட்டின் பிரதமரை பாகிஸ்தான் பிரதமர் அவமானப்படுத்திவிட்டதாகவும், இதைத் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாகப் பேசினார். இதனால், இந்த சர்ச்சை மேலும் வலுவானது.

இந்த நிலையில், லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை 'கிராமத்துப் பெண்' என்று தாம் ஒருபோதும் அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்ததாகவும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஒருபோதும் துணைநிற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x