Published : 14 Dec 2013 09:48 AM
Last Updated : 14 Dec 2013 09:48 AM
தலைநகர் பிரிட்டோரியாவில் அமைந்துள்ள அரசு கட்டிடத்தில் (யூனியன் பில்டிங்ஸ்) வைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு வெள்ளிக்கிழமை ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த ஒதுக்கப்பட்ட 3 தினம் வெள்ளிக்கிழமையுடன் முடிகிறது. எனவே தமது மனம் கவர்ந்த தலைவரின் முகத்தை இறுதியாக காண வியாழக்கிழமை பின்னிரவிலும் நீண்ட நேரம் கண்விழித்தபடி ஏராளமானோர் காத்திருந்தனர்.
சனிக்கிழமை காலை மண்டேலா உடல் வைக்கப்பட்ட பெட்டி தமது இளம்வயதில் அவர் வாழ்ந்த கேப் மாகாணத்தின் பூர்விக குனு கிராமத்துக்கு கொண்டு செல்லப்படும். அவரது குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது. அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக முக்கிய அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் என ஏராளமானோர் குனு வரவுள்ளனர்.
நுரையீரல் தொற்றால் பல மாதங்களாக அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த மண்டேலா (95) கடந்த 5ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் மரண மடைந்தார். மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மைதானத்தில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட ஏராளமான வெளி நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ராணுவ மருத்துவமனையிலிருந்து புதன்கிழமை அவர் உடல் வைக்கப்பட்ட பெட்டி ஊர்வலமாக, 3 நாள்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக யூனியன் பில்டிங்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT