Published : 19 Jun 2017 08:49 AM
Last Updated : 19 Jun 2017 08:49 AM

போர்ச்சுகல் காட்டுத் தீயில் 62 பேர் பலி

போர்ச்சுகலில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஐரோப்பாவின் தென்மேற்கில் போர்ச்சுகல் அமைந்துள்ளது. அதன் தலைநகர் லிஸ்பனுக்கு வடகிழக்கில் 150 கி.மீ. தொலைவில் பெட்ரோகோ கிராண்டி வனப்பகுதி உள்ளது. அங்கு தற்போது 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது.

இதன் காரணமாக பெட்ரோகோ கிராண்டி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக வனப் பகுதி முழுவதும் தீ மளமளவென்று பரவியது.

அப்பகுதி நெடுஞ்சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். 30 பேர் காரிலேயே கருகி உயிரிழந்த னர். அருகில் உள்ள கிராமங் களைச் சேர்ந்த மேலும் 32 பேர் தீயில் சிக்கி பலியாகினர். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறு கின்றனர்.

தீயின் உக்கிரத்தால் பல கிராமங்கள் அழிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் போர்ச்சுகலுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன. அந்த நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயை கட்டுப்படுத்த வனப்பகுதியில் தண்ணீரை தெளித்து வருகின்றன.

போர்ச்சுகல் பிரதமர் அந்தோனியோ கோஸ்டா கூறியபோது, இது மிகவும் மோசமான தீ விபத்து. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம். தீயை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறோம். பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x