Last Updated : 18 Nov, 2013 12:00 AM

 

Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM

தனித் தமிழ் ஈழம் கோரிக்கை கைவிடபட்டுவிட்டதா? - இரா. சம்பந்தன் பிரத்யேகப் பேட்டி

யாழ்ப்பாணத்துக்கு பிரிட்டன் பிரதமர் கேமரூன் வருகை தந்த உற்சாகத்துடன் காமன்வெல்த் மாநாடு நிறைவுறும் அதேநாளில் முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கொழும்பில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் ‘தி இந்து’வுக்காக தந்த பிரத்தியேக பேட்டி இது.

1976-ல் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தில் ‘தமிழ் ஈழமே தீர்வு’ என்று பிரகடனம் செய்தீர்கள். இப்போது வடக்கு மாகாணத் தேர்தலில் உங்கள் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றபோது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ என்ற நிலைப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்று வர்ணித்தீர்கள். அப்படியெனில், தனித் தமிழ் ஈழம் என்பதை இலங்கைத் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் நிராகரித்துவிட்டார்களா?

நாம் 70களுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். ஒரு இனத்தின் வரலாற்றில் பல்வேறு சகாப்தங்களை தாண்ட வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும். நாங்கள் ஆரம்பத்தில் கூட்டாட்சி தத்துவத்தின்கீழ் ஒரு தீர்வைக் காண முயன்றோம். ஆனால், அது கைகூடவில்லை. மாறாக, எங்கள் மக்கள் மீது பெரும்பான்மையினரால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1956, 1958, 1961, 1977, 1981, 1983-ம் ஆண்டுகளில் வன்முறைகள் தொடர்ந்தன. இந்த வன்முறைகளை இலங்கை அரசே முன்னின்று நடத்தியது. இவற்றில் 1983 ஜூலையில் நடந்த கலவரம் முத்தாய்ப்பாக அமைந்தது. ஆரம்பத்தில் நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காரணங்களால் எங்கள் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எமது உரிமைப் போர்கள் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைக் கோரிக்கைக்கு நியாயமான, சுதந்திரமான, நடைமுறைக்கேற்ற தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதுதான் இன்று எங்களுக்கு இருக்கும் ஒரே யதார்த்தமான வழி.

வடக்கு மாகாணத் தேர்தலின்போது, 3-ல் 2 பங்கு வெற்றியைத் தந்தால், ராணுவத்தை தமிழர் பகுதியிலிருந்து அகற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ராணுவத்தை அகற்றுவது சாத்தியம் எனக் கருதுகிறீர்களா?

ராணுவத்தை அகற்றுவது என்ற எங்களின் கோரிக்கை தொடர்கிறது. எங்கள் நிலங்களில் ராணுவம் இருப்பது தொடர்ந்து அசவுகரியத்தையும் சுயமரியாதைக் குறைவையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக எங்களின் பெண்களுக்கு - யாழ்ப்பாணத்தில் இருக்கும் விதவைகளுக்கு பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேர்தலின்போது வடக்கு மாகாணத்தில் பயணித்த காமன்வெல்த், சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளைப் படித்துப் பார்த்தால் ராணுவத்தின் அத்துமீறல் புரியும். அதையும் தாண்டி நாங்கள் வடக்கில் வெற்றி பெற்றிருக்கிறோம். ராணுவத்துக்கு எதிரான உணர்வை தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை உணர்ந்து நியாயமான முடிவுகளை எடுக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை. ஆட்சியின் அஸ்திவாரம் ஜனநாயகம். மக்களின் ஜனநாயக முடிவை மதிக்க வேண்டியது அரசின் கடமை.

காமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் வராதது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி நீங்கள் கருதுவது என்ன?

காமன்வெல்த் அமைப்பின் மதிப்பீடுகளை இலங்கை அரசு மதித்து நடக்கவில்லை. குறிப்பாக நல்லாட்சி, தனிமனித உரிமைகள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றில் இலங்கை அரசின் செயல்பாடு கவலைக்குரியதாக உள்ளது. ஆனால், அதேநேரத்தில், இந்திய அரசைப் பொருத்தவரை - இந்தியப் பிரதமரைப் பொருத்தவரை இத்தகைய முடிவுக்கு வர அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எத்தகைய முடிவெடுக்கும் உரிமையும் இந்தியாவுக்கு உண்டு. இது குறித்து நான் தனிப்பட்ட முறையிலோ எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலோ கருத்துரைக்க விரும்பவில்லை. ஆனால், எங்களுக்கு இந்தியாவின் உதவி நிச்சயம் தேவை. இந்திய அரசுடனும் தமிழக அரசுடனும் இணைந்து எங்கள் பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவின் பரிபூரண உதவி எங்களுக்குத் தேவை.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதென உங்கள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. புறக்கணிப்பதற்கு பதில் அதிலேயே பங்கேற்று உங்கள் அவலங்களை எடுத்துரைத்திருக்கலாமே?

காமன்வெல்த் மாநாட்டில் எங்கள் கருத்துகளை முன்வைக்க எங்களுக்கு அனுமதியில்லை. அதேநேரத்தில் எங்களைச் சந்திக்க வரும் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இலங்கைத் தமிழர்களின் துயர் தீர சர்வதேச சமூகத்திடம் எங்களைப் பற்றி எடுத்துக்கூறும் முயற்சி எப்போதும் தொடரும்.

பிரிட்டன் பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நீங்கள் என்ன பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்?

எங்களை ஆட்சி செய்த நாடு பிரிட்டிஷ். குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில்தான் எங்களுக்கு அந்த நாடு சுதந்திரம் தந்தது. சுதந்திரத்தின்போது இயற்றப்பட்ட அரசமைப்பு சாசனத்தில், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படு்த்தப்பட்டுள்ளது. இன்று அந்தப் பாதுகாப்பு அம்சம் மீறப்படுகிறது. தங்களால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் போதுமானதாக இல்லை என்பது பிரிட்டிஷ் அரசின் கருத்து. அதற்குப் பரிகாரமாக அந்நாட்டுப் பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளார். இந்தப் பின்னணியில்தான் கேமரூன் பயணத்தை நாங்கள் பார்க்கிறோம். பத்திரிகையாளர் சந்திப்பில் கேமரூன் தெரிவித்த கருத்துகளை இந்தப் புரிதலோடுதான் அணுகுகிறோம். இதன்படித்தான் இலங்கைத் தமிழர் விவகாரத்தைப் பார்க்க வேண்டும் என இலங்கை அரசைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

13வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த இலங்கை அரசு தயங்குவது ஏன்?

இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தத்தை நிரந்தர அரசியல் தீர்வாக எவரும் கருதவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்கீழ் அந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு பற்றியும் அது கூறுகிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசும் இந்தத் திருத்தத்தில் திருத்தம் செய்து கொண்டேயிருந்தன. சந்திரிகா குமாரதுங்க, பிரதமராயிருந்த ரனில் விக்ரமசிங்க, இன்றைய அதிபர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தோன்றியபடி திருத்தங்களை உருவாக்க முயன்றனர். இந்த சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அதிகாரப் பரவலை சாத்தியமாக்கப்போவதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ராஜபக்சே உறுதியளித்தார். ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின்கீழ் உருவான சட்டத்திருத்தத்தை மாற்றுவதற்கோ மீறுவதற்கோ முயற்சி செய்வது வியன்னா மாநாட்டு சாசனத்தை மீறிய செயலாகும். இந்த விஷயத்தில் இலங்கை அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. செய்தால், சர்வதேசரீதியில் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x