Published : 25 Nov 2013 08:29 PM
Last Updated : 25 Nov 2013 08:29 PM
மாவீரர் தினத்தை அனுசரிக்க தடை விதித்துள்ள இலங்கை அரசு, அந்தத் தினத்தை அனுசரிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் சென்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்ட செய்தியில், விடுதலைப் புலிகளைக் கொண்டாடுவதோ, அவர்களை ஊக்குவிப்பதோ தண்டமைனக்குரிய குற்றமாகும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மாவீரர் தினத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனுசரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அதை மீறுவோர் நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26-க்கு அடுத்த நாள் (நவ.27) விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மாவீரர் தினத்தை அனுசரிப்பது வழக்கம். இது, உயிர் நீத்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் நாள் ஆகும்.
இந்த தினத்தை அனுசரிக்கக் கூடாது என்று இலங்கை அரசும் ராணுவமும் அறிவித்துள்ளதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, மாவீரர் தினத்தையொட்டி, இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT