Published : 17 Sep 2013 01:52 PM
Last Updated : 17 Sep 2013 01:52 PM
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் ராணுவ ஒப்பந்த ஊழியர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய நபர், அமெரிக்க - ஆப்பிரிக்கரான ஆரோன் அலெக்ஸ் (34) என்றும், அவர் டெக்சாஸ் மாகாணம், போர்ட் வொர்த் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராணுவ உடையில் நுழைந்த அவர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், விஷ்ணு பண்டிட் (61) என்ற இந்தியர் உள்பட 12 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஆரோன் அலெக்ஸை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படை வீரர்கள், அவரை சுட்டு வீழ்த்தினர்.
துப்பாக்கிச்சூடு நடந்த வாஷிங்டன் கடற்படைத் தளம் 41 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு சுமார் 60,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஈ, காகம்கூட எளிதில் நுழைய முடியாதபடி அனைத்து வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், ஆரோன் அலெக்ஸ் ஒப்பந்த ஊழியர் என்பதால் முறையான அனுமதி சீட்டு மூலம் எளிதாக கடற்படை தளத்துக்குள் நுழைந்துள்ளார். இந்தத் தளத்தில் பல்வேறு அடுக்குமாடிக் கட்டடங்கள் உள்ளன. இதில் கடற்படையின் வெவ்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 197-வது கட்டடத்தின் 4-வது மாடியில் ஆரோன் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் எதற்காக இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தினார் என்பது இதுவரை தெரியவில்லை.
இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்துதான் அமெரிக்காவுக்கு அதிக அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆனால், உள்நாட்டிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது வருந்தத்தக்கது என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT