Published : 23 Sep 2013 02:44 PM
Last Updated : 23 Sep 2013 02:44 PM
ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக ஏஞ்சலா மெர்கல் பொறுப்பேற்கவுள்ளார்.
ஏஞ்சலாவின் கட்சி 42 சதவீத வாக்குகள் பெற்றது. அக்கட்சியும், அதன் கிளைக் கட்சியான பவாரியா மாகாணத்தில் மட்டும் செயல்படும் கிறிஸ்டியன் ஐக்கிய சமூகக் கட்சியும் இணைந்து, 311 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் நான்கு இடங்கள் தேவை என்றபோதும், ஏஞ்சலா மெர்கல் பிரதமராவது உறுதியாகியுள்ளது. சிடியு கட்சி கடந்த ஆண்டை விட கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது.
கடந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மட்டும்தான், சிடியு கட்சி பெரும்பான்மை பெற்றது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அப்போதைய பிரதமர் கோனார்டு அடேநௌர் தலைமையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
“இந்த வெற்றி மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. சிடியு கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி இது” என தனது ஆதரவாளர்களிடம் பேசும்போது மெர்கல் தெரிவித்தார்.
சிடியு-வின் மிகச்சிறிய கூட்டணிக் கட்சியான தாராள ஜனநாயகக் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால், ஆட்சியமைக்க வேறொரு கட்சியின் ஆதரவை மெர்கல் நாடுவார் எனத் தெரிகிறது.
முன்னதாக, 2005, 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் ஏஞ்செலா மெர்கல் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT