Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற் படுத்திட பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் மகிந்த ராஜபக்சே விடுத்துள்ள அழைப்பில் தெளிவு இல்லை என தமிழ் தேசிய கூட்ட மைப்பு கட்சி தெரிவித்திருக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு வரும்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவர்கள் குறிப்பிடுவது நாடாளுமன்ற தெரிவுக் குழுவைப் பற்றியா என்பது தெரியவில்லை என கூட்டமைப்பின் மூத்த தலைவரான சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண நகரான வவுனியாவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அது பற்றி பிரேமசந்திரன் விளக்கி பேசினார்.
சுமார் 6 மணி நேரம் நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோ சனைக் கூட்டத்தில் தீர்க்கப்படாமல் உள்ள தமிழர்கள் பிரச்சினை பற்றி விவாதித்து தற்போதைய நிலவரம் பற்றி ஆராயப்பட்டது. தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வடக்கு மாகாண சபையை திறம்பட நடத்திச்செல்வது ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தெரிவுக் குழு நம்பகத்தன்மை வாய்ந்ததாக தெரியவில்லை. அதனிடமிருந்து ஆக்கபூர்வ பலனோ, அரசியல் தீர்வோ தமிழர்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்றார் பிரேம சந்திரன். அதிபர் ராஜபக்சே முயற்சியில் அமைந்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவை தமிழத் தேசிய கூட்டமைப்பும் பிற எதிர்க்கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட அறிக்கை மீதான இறுதி விவாதத்தில் கடந்த வாரம் பங்கேற்று பேசிய அதிபர் ராஜபக்சே, இலங்கைத் தமிழர் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளின் தலையீட்டுக்கு இடம் தராமல் உள் நாட்டுக்குள்ளாகவே தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு வரும்படி தமிழர் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் .
அரசுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவை புறக்கணிப்பது என்கிற தமது முடிவில் மாற்றம் கிடையாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
25 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த செப்டம்பரில் நடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெரு வாரியான வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்கள் மத்தியில் ஏற்பட இந்த வெற்றியும் காரணமாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT