Last Updated : 31 Dec, 2013 12:00 AM

 

Published : 31 Dec 2013 12:00 AM
Last Updated : 31 Dec 2013 12:00 AM

குளிர்காலக் கவலைகள்

உத்தமர் உமரோவ், சிரியாவுக்குப் போயிருக்கும் தமது சிஷ்ய கோடிகளை ஊருக்குத் திரும்பி வரச் சொல்லி அழைத்திருக்கிறார்; விரைவில் ரஷ்யாவில் குளிர்கால குண்டோற் சவம் தொடங்கும் அபாயமிருக்கிறது என்று இந்தப் பத்தியில் சொல்லி பத்து நாள் ஆகியிருக்குமா?

இதோ அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்கள். ஞாயிற்றுக்கிழமை வோல்கோக்ராடு ரயில்வே ஸ்டேஷனில் மனித வெடிகுண்டுத் தாக்குதல். நேற்று திங்கள்கிழமை அதே ஊரில் ஒரு மின்சாரப் பேருந்தில் குண்டு வெடிப்பு. முன்னதில் சுமார் இருபது பேர் இறந்தார்கள். பின்னதில் பத்துப் பேர்.

ரயில்வே ஸ்டேஷன் சம்பவத்தின் பலி எண்ணிக்கை குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்டதாக இருந்திருக்க வேண்டியது. ஏனென்றால் அனைத்து ரயில்களும் தாமதமாக வந்து ஸ்டேஷன் முழுதும் ஏராளமான ஜனக்கூட்டம் நிரம்பி வழிந்த நேரம் அது. கொல்ல வந்த பெண் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக் கதவின் அருகே நின்ற போலீஸ்காரரைப் பார்த்துக் கொஞ்சம் பயந்து போய், உள்ளே போகாமல் அந்த இடத்திலேயே வெடிக்கச் செய்துவிட்டார். அதனால்தான் இருபது பேர் பத்தாது என்று நினைத்தார்களோ என்னமோ, திங்களன்று அதே ஊரில் ஓடுகிற ஒரு பஸ்ஸில் வைத்து விட்டார்கள்.

செச்னியப் போராளிகளுக்கும் ரஷ்ய அரசுக்கு மான யுத்தத்துக்கு வயது இருபது என்றும் சொல்லலாம், இருநூறு என்றும் சொல்ல லாம். 1817ம் வருஷம் காகசஸ் பிராந்தியத்தில் ஒரு கோர யுத்தம் ஆரம்பித்து, 1870ல் செச்னிய நிலப் பரப்பை ரஷ்யா தன்னோடு சேர்த்துக் கொண்டது முதலே இந்தப் பகையின் கதை ஆரம்பிக்கிறது.

இந்தப் புராதனப் பகை வரலாறின் நவீன கால முதலத்தியாயம் 1994ம் வருஷம் எழுதப்பட்டது. முன்னதாக 91ல் ரஷ்யாவில் இருந்து பிரிந்தே தீர்வது என்று முடிவு செய்து பல முயற்சிகள் செய்து பார்த்து 93ல் செச்னியா தான் நினைத்ததைச் சாதித்தது.

சும்மா இருக்குமா ரஷ்யா? அடுத்த வருஷம் ஆரம்பித்த யுத்தம் நாளது தேதி வரைக்கும் அதன் வீரியம் குன்றாமலேதான் இருந்துவருகிறது. என்ன ஒன்று, அவ்வப்போது அமைதி என்பார்கள். பேச்சுவார்த்தை என்பார்கள். போர் நிறுத்தம் என்பார்கள். ஆனாலும் குண்டுகள் வெடித்துக்கொண்டுதான் இருக்கும். எல்லை ஊடுருவல்கள் இருந்தபடியேதான் இருக்கும்.

இதெல்லாம் எங்கும் இருப்பதுதான்; ரஷ்யா வைப் பொறுத்தவரை எப்போதும் இருப்பதுதான் என்றாலும் இப்போது எதிர்வரும் பிப்ரவரியில் ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் செச்னியப் போராளிகளின் திருவிளையாடல்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதுதான் விளாதிமிர் புதினின் புத்தாண்டுக் கவலை.

ஒலிம்பிக் போட்டிகளை சீரும் சிறப்புமாக நடத்திக் கொடுக்கிறோம் என்று ரஷ்ய அரசாங்கம் பொதுவாகச் சொல்லியிருக்குமானால் யாதொரு பிரச்னையுமில்லை. சற்றே வித்தியாசமாக யோசித்து, 'சரித்திரத்திலேயே இல்லாதபடிக்கு அதி உன்னதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளாக' நடத்தித் தருகி றோம் என்று சொன்னார்கள். அதற்குத்தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது.

செச்னியப் போராளிகளின் நிஜமான பலம் குறித்த சரியான புள்ளி விவரங்கள் அநேகமாக யாருக்கும் தெரியாது. ரஷ்ய அரசாங்கம் உள்பட. அல் காயிதாவைப் போலவோ, தாலிபன்களைப் போலவோ அல்லது நேற்றைக்குப் பிறந்த அல் ஷபாபைப் போலவோ அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடையாது. தனி முகங்களுக்கு அங்கே பெரிய மதிப்பில்லை. அவ்வண்ணமே ரஷ்யா நீங்கலாக அவர்கள் வேறெங்கும் இதுவரைக்கும் பெரிதாக கவனம் ஈர்த்ததும் இல்லை.

சிரிய யுத்தத்தில் செச்னியப் போராளிகளின் பங்களிப்பு குறித்த சரியான தகவல்கள் ஏதும் இன்னும் வெளிவராத நிலையில் தம்மையும் தமது இருப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்தும் உலகம் அறியச் செய்வதற்கு அவர்கள் இந்த ஒலிம்பிக் போட்டிகளைத்தான் தீவிரமாக நம்புகிறார்கள்.

ரஷ்யாவுக்கு இது மானப் பிரச்னை. செச்னியப் போராளிகளை ஒலிம்பிக்குக்கு முன்னால் மொத்தமாக காலி பண்ணி விடுவதெல்லாம் தெய்வத்தாலாகாத காரியம். நெருக்கடி நேரத்தில் போராளிகளை தூர தேசத்துக்கு அனுப்பி வைப்பது லாபகரம் என்று நினைத்துத்தான் புளிசாத மூட்டையுடன் சிரியாவுக்கு அனுப்பினார் கள். ஆனால் இதென்ன விபரீதம்? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உமரோவுடன் ஓர் உடனடிப் பேச்சுவார்த்தைக்குத் துண்டுபோடுவது தவிர புதினுக்கு இப்போது வேறு வழியே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x