Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM

கிர்கிஸ்தான் சுங்குவார்சத்திரம்

மிகவும் மெதுவாக, ஆனால் உறுதியாக ரஷ்யா தனது அக்கம்பக்கத்து தேசத்து ரத்த சொந்தங்களின் காலாவதியாகிப் போன உறவுகளை ரென்யூ செய்யும் காரியத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது.

சோவியத் யூனியனாக இருந்த காலத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தவர்கள்தாம். இனம் வேறு, இடம் வேறு என்று பிரிந்து போன பழங்கதையெல்லாம் இனி பேசி உதவாது. நவீன உலகத்தில் வலுவான கூட்டணிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்கா, பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய தேசங்களைத் தம் பக்கம் வைத்துக் கொண்டிருக்கிறது. மத்தியக் கிழக்கைத் தனது காலனியாக்கும் பிரம்மாண்ட செயல் திட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட கிணறை சர்வ அலட்சியமாகத் தாண்டிவிட்டது.

வர்த்தக, ராணுவ உறவுகள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. கைகுலுக்கல்களுக்கு மத்தியில் பல பில்லியன் கணக்கான டாலர்களின் நாகரிக நர்த்தனம் மறைந்திருக்கிறது. நல்லது. உறவுகள் புதுப்பிக்கப்படுவதே ராஜதந்திரம். நவீன காலத்தில் அதுதான் ஜெயிப்பவனின் அடையாளம்.

உக்ரைனில் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் புரட்சிக்குப் பின்னால் ரஷ்யா - உக்ரைன் உறவுப் பாலத்துக்கு வலுவான தொடர்பு இருக்கிறது. உக்ரைனிய அதிபரோடு விளாதிமிர் புதின் கொண்டிருக்கும் சகாயத்தின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான முஷ்டி மடக்கல்கள் ஏதுமில்லை. மாறாக, ரஷ்யா தனது கரத்தை வலுப்படுத்திக்கொள்வதோடு கூட, ஐரோப்பிய - ரஷ்ய எல்லையை ஒட்டிய தேசங்களை ஒருங்கிணைப்பதன் எதிர்கால லாபங்கள் சார்ந்த பல கணக்குகள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன.

இன்றைக்கு கிர்கிஸ்தானுடன் ரஷ்யா ஓர் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது ராணுவ ஒப்பந்தம். மிகப் பிரம்மாண்டமானது. கிர்கிஸ்தானின் ராணுவத்தை முற்றிலும் நவீனமயமாக்கும் பொறுப்பை ரஷ்யா ஏற்றிருக்கிறது. ஆயுதங்கள், பிற ராணுவத் தளவாடங்கள், வண்டி வாகனாதி சௌகரியங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், விமானங்கள் அது இதுவென்று எதுவும் பாக்கியில்லை.

ஒரு காயலான் கடையை மாபெரும் நவீன ஒர்க் ஷாப்பாக்கும் திருப்பணி. தவிரவும் கிர்கிஸ்தான் ராணுவத்துக்கு ரஷ்யா பயிற்சியளிக்கும். நவீன போர்த்தொழில் விற்பன்னர்களாக கிர்கிஸ்தான் வீரர்களை உருவாக்கித் தரும். 2017க்குள் கிர்கிஸ்தான் ராணுவத்தைப் பிராந்தியத்தின் மிக வலு-வானதொரு ராணுவமாக ரஷ்யா உருமாற்றி வைக்கும்.

சென்ற வருடமே இதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. முதல் கட்டமாக ஒரு பில்லியன் டாலர் மதிப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கிர்கிஸ்தானில் ரஷ்ய ராணுவத் தளம் ஒன்றை நிறுவுவதற்கான இரு தரப்பு ஒப்புதல் வழங்கப்பட்டது. கிர்கிஸ்தானின் இந்த அபார உதவிக்குப் பிரதியாக அந்நாட்டின் 500 மில்லியன் டாலர் கடன் பாக்கியை ரஷ்யா தள்ளுபடி செய்யும்.

இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சி தான் இன்றைய ராணுவப் புனருத்தாரண நடவடிக்கைகள். ரஷ்யா உதவ வருகிறது. ராணுவத்தை பலம் பொருந்திய ஒன்றாக மாற்றித்தரவிருக்கிறது. ஆசியக் கண்டத்தில் கிர்கிஸ்தானை யாருக்குத் தெரியும்? ஓஹோ அப்படி ஒரு தேசம் இருக்கிறதா என்று கேட்பவர்களே மிகுதி.

ஆனால் இனி அப்படிக் கேட்க மாட்டார்கள். ஓ, கிர்கிஸ்தானா? ஆப்கனுக்குப் போகிற வழியில் சர்வதேச ராணுவத்தினர் வந்து இளைப்பாறிச் செல்லும் சுங்குவார் சத்திரமல்லவா என்று கேட்பார்கள். அனைத்து தேசத்து ராணுவத்துக்குமான சந்திப்புக் கேந்திரமாக ஆப்கனை முன்வைத்து கிர்கிஸ்தானுக்கு ஒரு முக்கியத்துவத்தை அளிக்க ரஷ்யா தீட்டியிருக்கும் திட்டம் இது. இதற்காகவே கிர்கிஸ்தானில் இருந்த அமெரிக்காவின் ஒரு ராணுவ விமானத் தளத்தை காலி பண்ணச் சொல்லிவிட்டார்கள்.

ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் ஐரோப்பிய தேசங்களுக்கும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அளித்திருப்பதில் சந்தேகமில்லை. இதை மீண்டும் ஒரு வல்லரசாவதற்கான தொடக்க நடவடிக்கையாகப் பார்த்தாலும் பிழையில்லை.

கடந்த வாரம் ஆப்கனிஸ்தானில் இருந்த ஆஸ்திரேலியப் படைகள் விடைபெற்றுக் கொண்டுவிட்டன. இனி ஒவ்வொரு தேசத்துப் படையும் மெதுவாக அவ்வாறே விடைபெற வேண்டும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் நேட்டோ படைகள் முற்றிலுமாக ஆப்கனில் இருந்து வெளியேற வேண்டும் என்பது ஏற்பாடு. இது நடக்கவிருக்கிற சூழ் நிலையில் ஆப்கனை முன் வைத்து ரஷ்யா கிர்கிஸ்தான் ராணுவத்துக்குச் செய்யவிருக்கும் ‘சர்வீஸ்' மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நிறையவே யோசிக்கவும் வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x