Last Updated : 12 May, 2019 10:23 AM

 

Published : 12 May 2019 10:23 AM
Last Updated : 12 May 2019 10:23 AM

இப்போதே வர்த்தகம் ஒப்பந்தம் செய்தால் நல்லது; இல்லையேல் நான் மீண்டும் அதிபரானால் மிக மோசமாகி விடும்: சீனாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவும் சீனாவும் மாறிமாறி தங்கள் பரஸ்பர இறக்குமதிப் பொருட்களுக்கு வரிக்கட்டணங்களை உயர்த்தி வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருவதால் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது, இதனால் உலகப்பொருளாதாரச் சீரழிவு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

 

இந்நிலையில் இப்போதே வர்த்தகம் ஒப்பந்தம் செய்து கொண்டால் உண்டு, இல்லையேல் 2020க்குப் பிறகு இன்னும் மோசமாகி விடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் அடுத்த முறை தான் அதிபராக வந்தால் இன்னும் மோசமாகி விடும் என்றே ட்ரம்ப் எச்சரிக்கிறார்.

 

இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் வெள்ளியன்று முடிந்து போனது.  மீண்டும் இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காகச் சந்திக்கும், ஆனால் ‘முக்கியக் கொள்கைகைளில்’ சீனா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூத்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

 

இந்நிலையில் ட்ரம்ப் தன் ட்வீட்டில், “சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் சீனா பெரிய அடி வாங்கியுள்ளது போல் தெரிகிறது. அதனால் அடுத்த அதிபர் தேர்தல் வரை இழுத்தடிக்கலாம் என்று நினைக்கிறது. ஜனநாயகக் கட்சி வென்றால் தங்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர். அப்படியானால் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்கள் வரை பெயர்த்து எடுத்துச் செல்லலாம் அல்லவா?

 

ஆனால் அவர்கள் ஆசையில் விழப்போகும் மண் என்னவெனில் நான் மீண்டும் அதிபராகப் போகிறேன். அப்போது ஒப்பந்தம் இன்னும் மிக மிக மோசமாகப் போகிறது. இப்போதே ஒப்பந்தம் செய்தால் அவர்களுக்கு நல்லது.

 

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தங்களின் வாக்குறுதிகளை சீனா காப்பாற்றவில்லை, சீனாவுக்கு இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கின்றனர், அதாவது 10% முதல் 25% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். உடனே பதிலுக்கு அமெரிக்காவும் 300 பில்லியன் டாலர்கள் பெறுமான சீன பொருட்களுக்கு கூடுதல் வரி உயர்த்தி பழி தீர்த்துள்ளது.

 

அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால் கூடுதல் கட்டணங்களை வர்த்தகர்கள் தவிர்க்க முடியும் என்கிறார் ட்ரம்ப்.

 

ட்ரம்பின் இத்தகைய கடினமான முறைகளுக்கு ஒரு சில குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டும் ஆதரவு இருக்க, குடியரசுக் கட்சியில் இருக்கும் தாராளமய பொருளாதாரவாதிகளோ இதனால் உண்மையான பொருளாதாரச் சேதமும் விவசாயிகளுக்கான சேதமும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

 

வர்த்தகப்போர் பரவலாக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் வேளாண் மற்றும் பிற பொருட்களுக்கு 110 பில்லியன் டாலர்கள் வரை வரி விதித்துள்ளது சீனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x