Last Updated : 25 Mar, 2019 05:55 PM

 

Published : 25 Mar 2019 05:55 PM
Last Updated : 25 Mar 2019 05:55 PM

தப்பினார் அதிபர் ட்ரம்ப்: ‘ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்யவில்லை’ - முல்லர் விசாரணை அறிக்கை: ஜனநாயகக் கட்சி அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிபர் பதவிக்கே ஆபத்து விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விவகாரத்தில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது டோனல்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்யவில்லை என்று அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு விசாரணை ட்ரம்புக்கு எதிராகத் திரும்பியிருந்தால் அமெரிக்க அரசியலில் பெரிய பரபரப்பு நிலைமைகள் உருவாகியிருக்கும்.  ட்ரம்ப் அதிபர் பதவியையே இழக்கக் கூடிய அபாய நிலை இருந்தது, ஆனால் இப்போது இந்த விசாரணை அறிக்கை மூலம் ட்ரம்ப் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்: “நம் நாடு இந்த விசாரணையை நோக்கிச் சென்றது வெட்கக் கேடு. உள்ளபடியே கூற வேண்டுமெனில் உங்கள் அதிபர் இதனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” என்று ட்வீட்டில் நிம்மதிப்பெருமூச்சு விட்டுள்ளார்.

 

ஆனால் இந்த விசாரணையின் போது நீதிக்கு இடையூறு விளைவித்தாரா ட்ரம்ப் என்பது குறித்து முல்லர் எந்தவித முடிவுக்கும் வரவில்லை என்பது சிக்கலாகியுள்ளது. இதனையடுத்து ஜனநாயகக் கட்சியினர் முழு அறிக்கையையும் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

 

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பின்புலத்தில் ரஷ்யா உள்ளதா என்ற கேள்விக்கான பதிலை தேடி கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்ட விசாரணை நடத்தி வந்தார் ராபர்ட் முல்லர். அதன் ஒரு பகுதியாக டிரம்பின் பல நெருங்கிய முன்னாள் உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

"இந்த அறிக்கையில் அதிபர் குற்ற செயலில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்படாத அதே சூழ்நிலையில், அவர் குற்றமற்றவர் என்றும் குறிப்பிடப்படவில்லை" என்று அந்த அறிக்கையில் முல்லர் குறிப்பிட்டுள்ளார். நீதிக்கு இடையூறு விளைவித்தாரா என்பதற்கு  முல்லர் அறிக்கையில் ட்ரம்புக்கு ஆதரவாகவும் உள்ளது, எதிராகவும் உள்ளது என்பதை ஜனநாயகக் கட்சியினர் குறித்து வைத்துக் கொண்டுள்ளனர்.

 

முல்லர் விசாரணை அறிக்கையின் முக்கிய கூறுகளை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து கூறிய போது கூட ட்ரம்ப் குற்றமற்றவர் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லையே என்று ஜனநாயகக் கட்சியினர் இந்த அறிக்கை கண்டு திகைத்துப் போயுள்ளனர்.

 

"இந்த அறிக்கையில் அதிபர் குற்ற செயலில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்படாத அதே சூழ்நிலையில், அவர் குற்றமற்றவர் என்றும் குறிப்பிடப்படவில்லை" என்று அந்த அறிக்கையில் முல்லர் குறிப்பிட்டுள்ளார்.

 

"நீதியை தடை செய்யும் வகையில் ஏதாவது செயல்பாடு இருந்துள்ளதா என்பது குறித்து சிறப்பு விசாரணையின் அறிக்கையில் எவ்வித வகையிலும் இறுதி முடிவு குறிப்பிடப்படவில்லை."

 

நீதிக்கு தடை ஏற்படுத்தும் வகையிலான குற்றத்தை அதிபர் டிரம்ப் இழைத்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு தேவையான அளவு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று பார் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யாவின் உதவியுடன் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

 

இந்த விசாரணையில் சதியில்லை என்று முல்லர் அறிக்கை தெரிவித்திருந்தாலும் ட்ரம்ப் மற்றும் அவரது சகாக்கள் முற்றிலும் இந்த வழக்கில் சட்ட விசாரணைகளிலிருந்து தப்பிவிட்டதாகக் கூற முடியாது என்று ஒருசில தரப்பினர் கூறுகின்றனர்.

 

ஆனால் பார் அவர்கள் தன் கடிதத்தில், ட்ரம்ப் நடவடிக்கைகள் எதுவும் பெடரல் கிரைமுக்குள் வராது, நீதிமன்றத்தில் எதையும் நிரூபிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

இப்போதைக்கு ட்ரம்ப் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி அகற்றப்பட்டுள்ளது என்றே கூற முடியும். ஆனால் முல்லர் விசாரணை குறித்த சந்தேகங்கள் வரும் காலங்களில் அமெரிக்க அரசியல், ஊடகங்களில் கோலோச்சும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x