Last Updated : 17 Nov, 2025 11:49 AM

 

Published : 17 Nov 2025 11:49 AM
Last Updated : 17 Nov 2025 11:49 AM

‘இது இறைவன் கொடுத்த உயிர்’ - மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து ஷேக் ஹசீனா கருத்து

புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அதுகுறித்து தான் கவலை கொள்ளவில்லை என்றும் ஹசீனா கூறியுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு முன்னதாக தனது ஆதரவாளர்களுக்கு ஆடியோ செய்தி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில், “அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக் கட்சி. அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது. எங்கள் கட்சி தொண்டர்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர்.

ஊழல்வாதியும், அடக்குமுறையாளரும், கொலைகாரருமான யூனுஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நிச்சயம் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். மக்கள் நீதி வழங்குவார்கள்.

நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன். மக்களின் நலனுக்காக மீண்டும் பாடுபடுவேன். வங்கதேச மண்ணில் நீதியை நிலைக்க செய்வேன். கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றோம். இருப்பினும் தொடர்ந்து புது புது கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். அமைதியற்ற பதற்றம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது. நான் 10 லட்சம் ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுத்தேன். அவர்கள் என் மீது மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டுகிறார்களா?

அவர்கள் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அது குறித்து எனக்கு கவலை இல்லை. இது இறைவன் கொடுத்த உயிர். அதை அவரே எடுத்துக்கொள்வார். நான் எனது நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். என் பெற்றோரையும், என் உடன்பிறப்புகளையும் இழந்துவிட்டேன். என் வீட்டை எரித்துவிட்டார்கள்” என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x