Last Updated : 16 Nov, 2025 02:08 PM

 

Published : 16 Nov 2025 02:08 PM
Last Updated : 16 Nov 2025 02:08 PM

மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.

வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். மெக்சிகோவில் கடந்த அக்டோபர் 2024 முதக் க்ளாடியா ஷீன்பாம் என்பவர் அதிபராக இருக்கிறார். மெக்சிகோவில் ஊழலும், வன்முறையும் ஷீன்பாம் ஆட்சியில் பெருகிவிட்டது என்பது இளைஞர்களின் குற்றச்சாட்டு.

இந்நிலையில் நேற்று மெக்சிகோ தலைநகரில் ஜென்ஸீ இளைஞர்கள் திரண்டனர். ஆரம்பத்தில் அதிபர் மாளிகையை நோக்கி திரண்ட இளைஞர்கள் அமைதியாகவே கோஷங்களை எழுப்பினர். நேரம் செல்லச் செல்ல போராட்டக் களத்தில் இளைஞர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்தனர். பின்னர், அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாட முயன்றனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் ஜென்ஸீ இளைஞர்களுக்கும் இடையே கடும் மோதம் ஏற்பட்டது. மேலும், மெக்சிகோவில் உயர் பதவியில் இருப்போரின் படுகொலை சர்வசாதாரணமாகிவிட்டது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

மெக்சிகோ அதிபர் க்ளாடியா ஷீன்பாம்

அண்மையில் மெக்சிகோவின் உருவாப்பான் நகரின் மேயர் கார்லஸ் ரோட்ரிகுவேஸ் படுகொலை செய்யப்பட்டார். நகரில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த அவர் கொல்லப்பட்டார். இதனாலும் ஜென்ஸீ இளைஞர்கள் கடும் ஆத்திரத்தில் இருந்ததாகத் தெரிகிறது. நாட்டில் பெருகிவரும் ஊழல், கிரிமினல் குற்றங்கள், உயர் பதவி வகிப்போருக்கு பாதுகாப்பின்மை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய போராட்டத்தில் சுமார் 100 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். போராட்டக்காரர்களில் 20 பேர் காயமடைந்தனர்.

பைரேஸ்ட் கொடி - போராட்டத்தில் ஈடுபட்ட ஜென்ஸீ இளைஞர்கள் கடற்கொள்ளையர்களை அடையாளப்படுத்தும் கருப்பு நிறத்தில் வெள்ளை எலும்புகூடு தலை உள்ள கொடியை ஏந்திவந்தனர். அவர்கள் நாட்டில் ஆட்சி நடக்கவில்லை கொள்ளையடிக்கும் கூட்டம் அதிகாரம் செலுத்துகிறது என்று முழங்கினர். மேலும் அதிபர் வசிப்பிடத்தை நெருங்கவிடாமல் போலீஸார் பாதுகாப்பு வளையத்தை வலுப்படுத்தியபோது, ‘இப்படித்தான் நீங்கள் மேயர் கார்லஸ் ரோட்ரிகஸையும் பாதுகாத்திருக்க வேண்டும் என அவசமாக முழங்கியதோடு போலீஸார் மீது கையில் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கி வீசினர்.

இந்நிலையில் இந்தப் போராட்டங்கள் குறித்து அதிபர் ஷீன்பாம் கூறுகையில், “வலதுசாரி கட்சிகள் தான் இந்தப் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளன. இதுமட்டுமல்லாது மேலும் சமூகவலைதளங்கள் வாயிலாக இந்தப் பெருங்கூட்டத்தைத் திரட்டியுள்ளனர்.” என்றார்.

இலங்கை, வங்கதேசம், நேபாளம் என ஜென்ஸீ போராட்டம் சமீப காலமாக கவனம் பெற்ற நிலையில் தற்போது மெக்சிகோவிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x