Published : 14 Nov 2025 10:44 AM
Last Updated : 14 Nov 2025 10:44 AM
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ட்ரோன் தயாரிப்புக்காக பல்வேறு நாடுகளில் இருந்து ரசாயனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்கப்படுகின்றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் 32 நிறுவனங்கள், தனிநபர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வழியாக ஈரானுக்கு சோடியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட், செபாசிக் ஆசிட் ஆகிய ரசாயனங்கள் சரக்கு கப்பல்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த பார்ம்லேன் நிறுவனம் சார்பில் ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் கொள்முதல் (யுஏஇ வழியாக)செய்யப்படுகிறது.
மேலும் துருக்கி, ஹாங்காங், ஜெர்மனி, உக்ரைன் நாடுகளை சேர்ந்த சில நிறுவனங்களும் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்து வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட தொழிலதிபர்களுடன் உலக நாடுகள் வணிகத்தில் ஈடுபடக்கூடாது. இதை மீறும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தடை விதிக்கப்பட்டது ஏன்? - அணு குண்டு தயாரிக்க ஈரான் முயற்சி செய்வதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரணமாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரானின் அணு சக்தி தளங்கள், ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக கடந்த ஜூன் 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசின.
இதனால் ஈரானின் ஏவுகணைகள் கையிருப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. இந்த சூழலில் ஏவுகணை உற்பத்தி மற்றும் ராணுவ ட்ரோன் உற்பத்தியில் ஈரான் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு தேவையான மூலப் பொருட்களை உலகம் முழுவதும் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதை தடுக்கவே 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT