Published : 14 Nov 2025 10:25 AM
Last Updated : 14 Nov 2025 10:25 AM
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோக்கோலோடி தேசியப் பூங்காவுக்கு திரவுபதி முர்மு, அதிபர் துமா கிடியான் ஆகியோர் சென்றனர். தேசியப் பூங்கா பகுதியில் இருவரும், பாதுகாப்பு வாகனத்தில் வலம் வந்தனர்.
அப்போது அங்கு வசிக்கும் 8 சிவிங்கிப் புலிகளை திரவுபதி முர்முவிடம், அதிபர் துமா கிடியான் ஒப்படைத்தார். அவை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன. இவர் களஹரி வனப்பகுதியிலிருந்து மோக்கோலோடி தேசியப் பூங்கா பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 3,700 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மோக்கோலோடி தேசியப் பூங்கா, மிகப் பிரபலமான வனவாழ்வு தலமாக உருவாகியுள்ளது.
இந்த தேசியப் பூங்காவில் காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, பல்வேறு ஆப்பிரிக்க பறவைகள், ஊர்வன விலங்குகள் ஆகியவை உள்ளன. அடுத்த சில வாரங்களில் இந்த சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2022-ம் ஆண்டில் நமீபியாவிலிருந்து 8, தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT