Last Updated : 12 Nov, 2025 07:05 PM

5  

Published : 12 Nov 2025 07:05 PM
Last Updated : 12 Nov 2025 07:05 PM

ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா

குறியீட்டுப் படம்

நியூயார்க்: ஆப்கனிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானியர்கள் அதிக அளவில் நாடு திரும்பும் கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர். சுமார் 23 லட்சம் பேர் இவ்வாறு நாடு திரும்பி உள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய 1,500 குடும்பங்கள் உட்பட 49,000 குடும்பங்களில் நாடு தழுவிய அளவில் ஐநா மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி ஆப்கனிஸ்தான் மக்கள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், சமீப காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 23 லட்சம் பேர் ஆப்கனிஸ்தானுக்கு திரும்பி உள்ளனர். இதனால், பற்றாக்குறை இன்னும் அதிகரித்துள்ளது. சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி ஆகியவை வெகுவாக சரிந்துள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் இன்னும் குறிப்பாக கிராமப்புற பெண்கள் மத்தியில் இவற்றுக்கான அணுகல் சாத்தியமற்றதாக உள்ளது.

ஆப்கனிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் உண்ணும் உணவின் அளவை குறைப்பது, சொத்துகளை விற்பது, கடன் வாங்குவது போன்ற எதிர்மறை நடவடிக்கைகளின் மூலம் சமாளிக்கின்றன. ஆப்கனிஸ்தானிலேயே தொடர்ந்து இருந்து வரும் குடும்பங்களில் 81 சதவீத குடும்பங்களும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய குடும்பங்களில் 88 சதவீத குடும்பங்களும் கடனால் தவித்து வருகின்றன.

நங்கர்ஹார், குனார், சமங்கன் மாகாணங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்கள், திடீர் வெள்ளம், வறட்சி ஆகியவை இம்மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. குடும்பத் தலைவர் இல்லாததால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. வருமானம் ஈட்டும் ஆண்கள் இல்லாத நிலையில், பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அத்தகைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா உயர் அதிகாரி கன்னி வக்னராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட முதலீடுகள் காரணமாக சில பகுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஐநா மேம்பாட்டு திட்டம் (UNDP), தனது கூட்டாளிகளுடன் இணைந்து கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் இப்பகுதிகளில் மின்சாரம், சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு ஆகியவை மேம்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x